ஆர்.சி.இ.பி. ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்து போடாதற்கு நாங்கதான் காரணம்: காங்கிரஸ்

 

ஆர்.சி.இ.பி. ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்து போடாதற்கு நாங்கதான் காரணம்: காங்கிரஸ்

ஆசியான் நாடுகள் உள்பட 16 நாடுகளுக்கு இடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்து போடாதற்கு எங்களுடைய வலுவான எதிர்ப்புதான் காரணம் என காங்கிரஸ் கூறியுள்ளது.

ஆசியான் நாடுகள் மற்றும் சீனா, இந்தியா உள்பட 16 நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பாக 2012ம் ஆண்டு முதல் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு (ஆர்.சி.இ.பி.) ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் சீனா மிகவும் தீவிரமாக இருந்தது. அதேசமயம், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் பல விஷயங்கள் பாதகமாக இருந்ததால் இது நம் நாடு கவலை தெரிவித்தது. மேலும், இவற்றை சரி செய்ய வேண்டும் என தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வந்தது.

தாராள வர்த்தக ஒப்பந்தம்

இந்த நிலையில் தாய்லாந்தில் நேற்று நடந்த 3வது ஆர்.சி.இ.பி. உச்சிமாநாட்டில் இந்த ஒப்பந்ததுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவின் கவலைக்குரிய விஷயங்களுக்கு தீர்வு வழங்கப்படவில்லை அதனால் அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக மோடி உறுப்பு நாடுகளிடம் தெரிவித்தார்.

ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு

அதேசமயம் மற்ற நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதால் ஆர்.சி.இ.பி. ஒப்பந்தம் நிறைவேறியது. இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு சாதகமானது. அதேசமயம் இந்த ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேறியதால், இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக சீன பொருட்கள் நம் நாட்டு சந்தையில் குவிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.சி.இ.பி. ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்து இடாதற்கு எங்களது வலுவான எதிர்ப்புதான் காரணம் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

காங்கிரஸ்

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவால் டிவிட்டரில், காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் வலுவான எதிர்ப்பு காரணமாக, விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், மீனவர்கள், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் நலனை அரசியல் பலிபீடத்தில் பலியிடும் முடிவிலிருந்து பா.ஜ.க. அரசு பின்வாங்கியுள்ளது. தேசிய நலன்களை பாதுகாப்பதற்காக போராடும் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார மேலாண்மை காரணமாக வேலையின்மை, மூழ்கும் பொருளாதாரம் மற்றும் விவசாய பிரச்னைகள் நிலவுகிறது. இந்நிலையில் ஆர்.சி.இ.பி.ல் கையெழுத்து போட்டால் அது பேரழிவை ஏற்படுத்தும் என பதிவு செய்துள்ளார்.