ஆரோக்கிய சேது செயலி தொடர்பாக அரசை விமர்சித்த ராகுல் காந்தி…. பதிலடி கொடுத்த ரவிசங்கர் பிரசாத்….

 

ஆரோக்கிய சேது செயலி தொடர்பாக அரசை விமர்சித்த ராகுல் காந்தி….   பதிலடி கொடுத்த ரவிசங்கர் பிரசாத்….

ஆரோக்கிய சேது செயலி தொடர்பாக மத்திய அரசை விமர்சனம் செய்த ராகுல் காந்திக்கு, வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டவர்களுக்கு தொழில்நுட்பத்தை நன்மைக்காக எவ்வாறு பயன்படுத்த முடியும் என்று தெரியாது என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக ஆரோக்கிய சேது செயலியை கடந்த ஏப்ரலில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த செயலியை தானாக முன்வந்து பல கோடி பேர் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்தனர். இந்நிலையில் மே 4ம் தேதி முதல் நாட்டின் எந்தபகுதியிலும வேலைபார்க்கும் தனியார் மற்றும் அரசு பணியாளர்களின் செல்போன்களில் ஆரோக்கிய சேது கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், தனியார் நிறுவனத்தில் பணியாளரின் செல்போனில் ஆரோக்கிய சேது அப் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டால் நிறுவனத்தின் தலைவர்தான் அதற்கு பொறுப்பு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆரோக்கிய சேது செயலி தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 

ஆரோக்கிய சேது

ஆரோக்கிய சேது செயலி குறித்து ராகுல் காந்தி டிவிட்டரில், ஆரோக்கிய சேது செயலி ஒரு அதிநவீன கண்காணிப்பு அமைப்பாகும். இருப்பினும் இதனை ஒரு தனியார் நிறுவனம் அவுட்சோர்ஸ் செய்தது. நிறுவன மேலாண்மை இல்லாததால் தீவிர தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகளை எழுப்புகிறது. தொழில்நுட்பம் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். ஆனால் குடிமக்களின் அனுமதியின்றி அவர்களை கண்காணிக்க பயன்படுத்த கூடாது என பதிவு செய்து இருந்தார்.

ரவி சங்கர் பிரசாத்

ராகுலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது டிவிட்டரில், தினசரி ஒரு பொய். ஆரோக்கிய சேது மக்களை பாதுகாக்கும் சக்திவாய்ந்த துணை. வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டவர்களுக்கு தொழில்நுட்பத்தை நன்மைக்காக எவ்வாறு பயன்படுத்த முடியும் என்று தெரியாது என பதிவு செய்து இருந்தார்.