ஆயிரம் வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்வேன்: கருணாஸ் அதிரடி

 

ஆயிரம் வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்வேன்: கருணாஸ் அதிரடி

என் மீது ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதனை நான் எதிர்கொள்வேன் என எம்.எல்.ஏ கருணாஸ் கூறியுள்ளார்.

வேலூர்: என் மீது ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதனை நான் எதிர்கொள்வேன் என எம்எல்ஏ கருணாஸ் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரியை மிகவும் தரக்குறைவாக பேசினார். அதனையடுத்து அவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும், 8 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதில் சென்னையில் ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களைத் தாக்கிய வழக்கும் அடங்கும்.

இதனையடுத்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கருணாஸின் மனுவை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதற்கிடையே கருணாஸ் மீது ஐபிஎல் விவகாரத்தில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

எனவே அந்த வழக்கிலும் ஜாமீன் கோரி கருணாஸ் மனு தாக்கல் செய்தார். மனுவை நேற்று பரிசீலித்த எழும்பூர் நீதிமன்றம், திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களும் தவறாமல் தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் என கருணாஸூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அவர் வேலூர் சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

சிறையை விட்டு வெளியே வந்த கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், என் மீதான வழக்குகளில் உண்மை நின்றது, நீதி வென்றது.  ஸ்டெர்லைட் விவகாரத்தில் கருத்து தெரிவித்ததால் என் மீது பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதுபோன்று ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் என்றார்.