ஆப்கன் தேர்தல் பிரசாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல்; 14 பேர் பலி

 

ஆப்கன் தேர்தல் பிரசாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல்; 14 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பேரணியின் போது நிகழ்த்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குதலில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பேரணியின் போது நிகழ்த்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குதலில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற கீழவைக்கான தேர்தல் வருகிற 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அந்நாட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கு மாகாணத்தில் உள்ள நாங்கர்ஹரில் சுயேட்சை வேட்பாளர் அப்துல் நாசர் முகமது என்பவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, மக்களோடு மக்களாக தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட தற்கொலை படைத் தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடி குண்டுகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், தலிபான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த்துள்ள அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் சுயேட்சை வேட்பாளர் அப்துல் நாசர் முகமதுவிற்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.