ஆன்லைன் மருந்து வணிகத்தை கண்டித்து மருந்தகங்கள் இன்று போராட்டம்

 

ஆன்லைன் மருந்து வணிகத்தை கண்டித்து மருந்தகங்கள் இன்று போராட்டம்

ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி நாடு முழுவதும் மருந்து கடைகளை அடைத்து மருந்தகங்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன

சென்னை: ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி நாடு முழுவதும் மருந்து கடைகளை அடைத்து மருந்தகங்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க வரைவு அறிக்கை கடந்த மாதம் 28-ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், உயிர் காக்கும் பொருளான மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆன்லைன் மூலம் வாங்கும் போது மருந்துகள் மாறுவதற்கும் காலாவதியான மருந்துகள் அனுப்பிவைக்கவும் வாய்ப்புகள் அதிகம் எனவும், தடை செய்யப்பட்ட மருந்துகளை சிறுவர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் வாங்குவதற்கும் ஆன்லைன் மருந்து விற்பனை வழி வகுக்கும் எனவும் வேதனை தெரிவித்துள்ள அவர்கள், ஆன்லைன் மருந்து வணிகம் நடைமுறைக்கு வந்தால், மருந்து கடை தொழிலையே நம்பி இருக்கும் 8 லட்சம் பேர் நேரடியாகவும், 40 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்க கூடாது என்பதை வலியுறுத்தி கண்டித்து ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் மருந்து கடைகள் உரிமையாளர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதி அளிக்க இருக்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மீண்டும் மருந்தகங்கள் 24 மணி நேர கடை அடைப்பு போராட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் 8 லட்சம் கடைகள் அடைக்கப்படுகின்றன. தமிழகத்தில் 35 ஆயிரம் மருந்து கடைகள் இருக்கின்றன. இதில் மருத்துவமனைக்குள் உள்ள 5 ஆயிரம் கடைகளை தவிர, மீதம் உள்ள 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்படுவதாக, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கே.செல்வன் தெரிவித்துள்ளார்.