ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடை

 

ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடை

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை: ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களும் வீடு தேடி வரும் நிலை தற்போது உருவாகி உள்ளது. அந்த வகையில் மருந்துகளையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வழக்கம் தற்போது அதிகரித்து உள்ளது. ஆனால் இதில் ஏராளமான ஆபத்துக்கள் இருக்கிறதாக சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கூறி வருகின்றனர். மேலும் இந்த முறையை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுவதால் சில்லறை வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், பதிவு செய்யப்படாத கடைகள் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. காலாவதியான, போலியான மருந்துகள் விற்பனை செய்ய வாய்ப்பிருக்கிறது. மருத்துவர்கள் அளிக்கும் மருந்து சீட்டில்லாமல் விதிமீறி மருந்துகள் விற்கப்படுகின்றன. எனவே இதனை தடை செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி மகாதேவன் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஆன்லைன் மூலம்  மருந்து விற்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து நவம்பர் 20-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.