ஆந்திர விஷவாயு கசிவு சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்ட எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனம்… ஆலையை இடம் மாற்றக்கோரி மக்கள் போராட்டம்……

 

ஆந்திர விஷவாயு கசிவு சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்ட எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனம்… ஆலையை இடம் மாற்றக்கோரி மக்கள் போராட்டம்……

11 பேரை பலி வாங்கிய விசாகப்பட்டிணம் ஆலை விஷவாயு கசிவு நிகழ்வுக்கு சம்பந்தப்பட்ட எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. அதேசமயம் அநத பகுதிகள் ரசாயன ஆலையை இடமாற்றம் செய்யக்கோரி நேற்று போராட்டம் நடத்தினர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே  உள்ள கோபால்பட்டிணத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் என்ற தனியார் ரசாயன ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமையன்று அந்த ஆலையில் அதிகாலை 2.30 மணி அளவில் ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிந்தது. இதனால் அந்த ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கண்களில் எரிச்சல் உணர்வு மற்றும் சுவாச பாதிப்புகளும் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் விஷவாயு கசிவால் 11 பேர் பலியாகி உள்ளனர். 

விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சி

விஷவாயு கசிவு நடந்த எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் ஆலை தென்கொரியாவை சேர்ந்த எல்.ஜி. செம் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்துஸ்தான் பாலிமர்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த ஆலையை 1997ல் எல்.ஜி. செம் கையகப்படுத்தி எல்.ஜி. பாலிமர்ஸ் என பெயர் மாற்றம் செய்து நடத்தி வருகிறது. விஷவாயு கசிவு சம்பவம் நடந்து 2 தினங்கள் கடந்து விட்டநிலையில் தற்போது எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனம் சோக நிகழ்வுக்கு மன்னிப்பு கோரியுள்ளது.

எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் முன் மக்கள் போராட்டம்

சென்னையில் உள்ள கொரிய குடியரசின் துணைத் தூதரகம் வாயிலாக எல்.ஜி. நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்த சோகத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு உதவியும் வழங்குவோம். இந்த சம்பவத்தின் (விஷவாயு கசிவு) காரணத்தை ஆராய இந்திய அதிகாரிகளுடன் நிறுவனம் நெருக்கமாக செயல்படும். ஸ்டைரீன் மோனோமர் சேமிப்பு தொட்டியிலிருந்து கசிந்த நீராவியால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக எங்களது முதல்கட்ட விசாரணைகள் பரிந்துரை செய்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று ஆர்.ஆர். வெங்கடபுரத்தை சேர்ந்த குடியிருப்புவாசிகள் விசாகப்பட்டிணத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் முன் ரசாயன ஆலையை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்