ஆந்திராவில் லாக்டவுன் சமயத்தில் கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்துக்கு உதவிய அங்கன்வாடி ஊழியருக்கு பரிசு…..

 

ஆந்திராவில் லாக்டவுன் சமயத்தில் கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்துக்கு உதவிய அங்கன்வாடி ஊழியருக்கு பரிசு…..

ஆந்திர பிரதேசத்தில் ஊரடங்கு சமயத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து கவனித்து கொண்ட அங்கன்வாடி பெண் ஊழியருக்கு கர்னூல் மாவட்ட கலெக்டர் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஆந்திர பிரதேசம் கர்னூல் மாவட்டம் நந்த்யால் டவுனில் வசித்து வருபவர் திவ்யபாரதி. கர்ப்பிணியா இருந்த திவ்யபாரதிக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரசவ வலி ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவரது வீட்டில் அவரை தவிர வேறு யாரும் இல்லை. ஊரடங்கு காரணமாக அவரது குடும்பத்தினரால் குர்னூரிலிருந்து நந்த்யாலுக்கு வரமுடியவில்லை. பிரசவ வலி கடுமையான இருந்ததால் உதவிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் அங்கன்வாடியில் வேலைபார்க்கும் சென்னம்மாவை உதவிக்கு அழைத்தார்.

தாய், சேயுடன் சென்னம்மா

உடனே சென்னம்மாவும் திவ்யபாரதியை உடனடியாக அந்த நகரில் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றார். அங்கு திவ்யபாரதிக்கு முதல்கட்ட பரிசோதனைகள் நடைபெற்றது. பின் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு  திவ்யபாரதிக்கு சிசேரியன் வாயிலாக அழகான ஆண்குழந்தை பிறந்தது. அதன்பிறகும் திவ்யபாரதியுடன் இருந்து அவரை சென்னம்மா கவனித்து கொண்டார். இது குறித்து திவ்யபாரதி கூறுகையில், சென்னம்மா மட்டும் எனக்கு நம்பிக்கை அளிக்கவில்லையென்றால் என் நிலைமை மோசமாகி இருக்கும் என தெரிவித்தார். மேலும் அவருக்கு மனமார நன்றி தெரிவித்தார்.

தாய், சேயுடன் சென்னம்மா

சொந்தகாரங்களே இக்கட்டான நேரங்களில் கைவிட்டு விடும் நிலையில், பக்கத்து வீட்டு பெண்ணான சென்னம்மா திவ்யபாரதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதுடன், குழந்தை பிறகும் அருகில் இருந்து கவனித்து கொண்டதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து சென்னம்மா கூறுகையில், அவள் (திவ்யபாரதி) எனது மகள் போன்றவள். அவளை கவலைப்பட வேண்டாம் என்றும், இந்த மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுக்க ஊக்கம் அளித்ததாகவும் தெரிவித்தார். சென்னம்மாவின் அர்ப்பணிப்பான மற்றும் சுயநலம் இல்லாத செயலை கேள்விப்பட்ட குர்னூல் கலெக்டர் சென்னம்மாவுக்கு பரிசாக ரூ.20 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என அறிவித்தார்.