ஆந்திராவில் கடும் வெயில்; மூன்று பேர் பலி!

 

ஆந்திராவில் கடும் வெயில்; மூன்று பேர் பலி!

காலை முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுவதால், அலுவலகம் மற்றும் சொந்த பணிகளுக்கு வெளியில் செல்வோர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான வெயிலில் சிக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கோடை வெயில் தொடங்கும் முன்பே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதையடுத்து, அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியதில் இருந்து கோடை வெயிலின் தாக்கம் தாக்கம் வழக்கத்தை விட அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

summer

காலை முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுவதால், அலுவலகம் மற்றும் சொந்த பணிகளுக்கு வெளியில் செல்வோர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பலர் சுருண்டு விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

அந்த வகையில், கடுமையான வெயிலில் சிக்கி ஆந்திர மாநிலத்தில் மட்டும் தற்போது வரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் விசாகப்பட்டினம், விழியநகரம் மற்றும் சித்தூரை சேர்ந்தவர்கள். அதுதவிர, சுமார் 433 பேர் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடப்பா மாவட்டத்தில் மட்டும் 179 பேர் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

dead

அதிகபட்சமாக கடந்த 5-ம் தேதியன்று மேற்கு கோதாவரி மாவட்டம் போலாவரத்தில் 46.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், குண்டூர், பிரகாசம், கிருஷ்ணா மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகமாக இருக்கும் எனவும், சுமார் 47 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேசமயம், முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.