ஆதார் கட்டாயமா? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

 

ஆதார் கட்டாயமா? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ஆதார் அட்டை திட்டம் அரசியல் சாசனப்படி, செல்லத்தக்கதா என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது

டெல்லி: ஆதார் அட்டை திட்டம் அரசியல் சாசனப்படி, செல்லத்தக்கதா என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.

ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் நோக்கம்.

கண்ணின் விழித்திரை, கைரேகை போன்றவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் இதில் உள்ளீடு செய்யப்பட்டு, 12 இலக்க எண் பொறித்த அட்டையாக ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை கடந்த 2009-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்தது. இதையடுத்து, மத்திய அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் வகையில், ஆதார் சட்டத்தை கடந்த 2016-ஆம் ஆண்டில் பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பயோமெட்ரிக் தகவல்கள், கைரேகை, கண் விழித்திரை தகவல்கள் உள்ளிட்டவை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு கட்டாயம் அல்ல என்றும் இதன் மூலம் தகவல் திருடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வந்தது. கடந்த ஜனவரி 17-ம் தேதி தொடங்கிய இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த  நிலையில், ஆதார் திட்டம் செல்லத்தக்கதா என்பது குறித்து நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளனர்.