ஆண்டு சம்பளமே ரூ.60 ஆயிரம்தான்….. ரூ.3.49 கோடி கட்ட சொல்லி வந்த வருமான வரித்துறை நோட்டீஸ்…. ஷாக்கான மத்திய பிரதேச வாலிபர்….

 

ஆண்டு சம்பளமே ரூ.60 ஆயிரம்தான்….. ரூ.3.49 கோடி கட்ட சொல்லி வந்த வருமான வரித்துறை நோட்டீஸ்…. ஷாக்கான மத்திய பிரதேச வாலிபர்….

மத்திய பிரதேசத்தில் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்த இளைஞர் ஒருவருக்கு, ரூ.3.49 கோடி அபராதம் செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம்  மாநிலம் பிஹிந்த் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி குப்தா. இவர் தற்போது பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் உள்ள பி.பி.ஓ. நிறுவனத்தில் துணை மேலாளாராக பணியாற்றி வருகிறார். ரவி குப்தாவுக்கு கடந்த மாதம் வரி துறை ரூ.3.49 கோடி அபராதம் கட்டும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. 2011-12ம் நிதியாண்டில் அவரது வங்கி கணக்கில் ரூ.132 கோடி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும், அது தொடர்பாகதான் அபராதம் செலுத்தும்படியும் வரித்துறை விளக்கம் தெரிவித்து இருந்தது.

வருமான வரி துறை

வரித் துறை நோட்டீஸில் குறிப்பிட்டு இருந்த 2011-12ம் நிதியாண்டில் ரவி குப்தா இந்தூரில் உள்ள ஒரு பி.பி.ஓ.வில் ரூ.60 ஆயிரம் ஆண்டு சம்பளத்தில் வேலை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி குப்தா, குவாலியர் வரித்துறை அதிகாரிகளிடம் இந்த பரிவர்த்தனை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். ஆனால் அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து ரவி குப்தா தானே விசாரணையில் களம் இறங்கினார்.

வங்கி கணக்கு

விசாரணையில், மும்பையில் செயல்படும் சூரத் கம்பெனி ஒன்று ரவி குப்தாவின் பான் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கை தொடங்கியுள்ளது. மேலும்,குறிப்பிட்ட பணபரிவர்த்தனைகளை மேற்கொண்ட உடன் அந்த நிறுவனம் அந்த வங்கி கணக்கை குளோஸ் செய்த தகவல் அறிந்து ரவி குப்தா அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது தொடர்பாக மும்பை போலீசில் புகார் கொடுக்கும்படி குவாலியர் மற்றும் லூதியானா போலீசார் ரவி குப்தாவிடம் கூறியுள்ளனர். ஆனால் மும்பையில் மோசடி செய்த நிறுவனத்தால் தன் உயிருக்கு ஆபத்து வரும் என பயத்தில் ரவி குப்தா அங்கு சென்று புகார் கொடுக்காமல் இருக்கிறார். இது குறித்து ரவி குப்தா கூறுகையில், நாம் அபராதத்தை செலுத்த தவறினால், நான் கடனில் வாங்கிய வீடு பறிமுதல் செய்யப்படும் மற்றும் எனது சம்பளம் அரசு கருவூலத்துக்கு மாற்றிவிடப்படும் என தெரிவித்தார்.