ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை ஒடிசாவில் கோலாகலமாக இன்று துவக்கம்

 

ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை ஒடிசாவில் கோலாகலமாக இன்று துவக்கம்

ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் கோலாகலமாக இன்று துவங்கவுள்ளது

புவனேஸ்வர்: ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் கோலாகலமாக இன்று துவங்கவுள்ளது.

உலககோப்பை ஹாக்கி போட்டி கடந்த 1971-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. நாளை முதல் டிசம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்திய அணி சி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இருக்கின்றன. இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி டி பிரிவில் இருக்கிறது.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும். ‘லீக்’ முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 4-வது இடத்தை பிடிக்கும் அணி வெளியேற்றப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 2-வது, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் கிராஸ் ஓவர் முறையில் விளையாடும். இந்த 4 ஆட்டத்தின் முடிவில் 4 அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

லீக் ஆட்டங்கள் வருகிற 9-ம் தேதியுடன் முடிகிறது. 2-வது சுற்று 10 மற்றும் 11-ம் தேதிகளிலும், கால் இறுதி 12 மற்றும் 13-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது. 15-ம் தேதி அரை இறுதியும், 16-ம்தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது. இந்திய அணி மன்பிரீத்சிங் தலைமையில், நடப்பாண்டில் நடைபெறும் 14-வது உலககோப்பை ஹாக்கிப் போட்டித் தொடரில் களமிறங்குகிறது. சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை இந்த அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில், நடப்பாண்டு உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் தொடக்க விழா ஒடிசா  மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இன்று மாலை கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான், மாதுரி தீட்சித் ஆகியோர் பங்கேற்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். தொடக்க விழா மாலை 6.30 மணி முதல் டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.