ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கவர்னர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்த சிவ சேனா கூட்டணி!

 

ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கவர்னர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்த சிவ சேனா கூட்டணி!

மகாராஷ்டிராவில் அடுத்த திருப்பமாக, தங்களது கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் நேற்று கவர்னர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர்.

மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமையன்று யாரும் எதிர்பாராத வண்ணம் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியின்  இந்த நடவடிக்கையை  எதிர்த்து சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கவர்னர் அலுவலகத்தில் நேற்று கடிதம் கொடுத்துள்ளன.

மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி

சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் நேற்று கவர்னர் அலுவலகத்துக்கு சென்று தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கடிதம் கொடுத்தனர். அந்த கடிதத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டில், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரத் மற்றும் சிவ சேனாவின் சட்டப்பேரவை தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கையொப்பம் இட்டு இருந்தனர். மேலும், சிவ சேனா தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்கும் 162 எம்.எல்.ஏ.களும் அதில் கையெழுத்து போட்டு இருந்தனர்.

உத்தவ் தாக்கரே, சரத் பவார், சோனியா காந்தி

இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், எங்களுக்கு போதுமான பலம் உள்ளது. ஆட்சி அமைக்க எங்களை உடனடியாக அழைக்க வேண்டும் என தெரிவித்தார். அதேசமயம் கடந்த சனிக்கிழமை முதல் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களை காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.