ஆட்சியை கவிழ்க்க தினகரனுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை: தங்க.தமிழ்ச்செல்வன் பகீர் தகவல்

 

ஆட்சியை கவிழ்க்க தினகரனுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை: தங்க.தமிழ்ச்செல்வன் பகீர் தகவல்

எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரனுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தியதாக டிடிவி ஆதரவாளர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சென்னை: எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரனுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தியதாக டிடிவி ஆதரவாளர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக முதல்வராக ஓ.பி.எஸ் இருந்த போது, திடீரென ஒரு நாள் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதற்கு அடுத்த நாள் மாலையே, ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த ஓ.பி.எஸ், சசிகலாவும் அவரது குடும்பத்தாரும் தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அதன்பின், அதிமுக அரசு கவிழும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், ஆட்சி அமைக்க போதுமான அளவிற்கு தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை திரட்டிக் கூவத்தூரில் தங்க வைத்தார் சசிகலா.

அந்த பணிகளை கருணாஸ் உதவியுடன் சத்தமில்லாமல் செய்து முடித்தது தினகரன் தான் என அப்போதே செய்திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து சசிகலா முதல்வராக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நிலுவையில் இருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புகள் உடனடியாக வழங்கப்பட்டு பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார்.

அப்போது தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை வைத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசை அமைத்துவிட்டுச் சென்றார் சசிகலா. அதுவரை தனி அணியாக செயல்பட்டு வந்த ஓ.பி.எஸ் பக்கம், பெரிய அளவிலான எம்.எல்.ஏக்கள் செல்லவில்லை. இருப்பினும் அவருக்கு கணிசமான அளவு செல்வாக்கு இருப்பதாக டெல்லிக்கு தகவல் சென்றதையடுத்து, இருவரும் ஒரே அணியாக செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதனடிப்படையில், முதல்வராக எடப்பாடி நீடிக்கவும், ஓ.பி.எஸ் துணை முதல்வராக பொறுப்பேற்கவும் முடிவு செய்யப்பட்டு, இணைப்பு விழா நடைபெற்றது. இந்த இணைப்பின் முடிவில், ஆட்சியில் செல்வாக்குடன் இருந்த தினகரனுக்கு சறுக்கல் ஆரம்பமானது.

epsopsttv

அதன்பின் தனித்துவிடப்பட்ட தினகரனுக்கு ஆதரவாக 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றனர். அவர்கள் மீதான தகுதி நீக்க வழக்கு இன்றும் நிலுவையில் தான் இருக்கிறது. இழந்த செல்வாக்கை ஆர்.கே.நகர் வெற்றி மூலம் தினகரன் திரும்பப் பெற்றார் என்பதே மறுக்க முடியாத உண்மை.

இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்ற கோரிக்கையுடன் 2017-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி, கோட்டூர்புரத்தில் நண்பர் ஒருவரது இல்லத்தில் தினகரனை சந்தித்து ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தியதாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வாரம் கூட தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் நேரம் கேட்டதாகவும், இந்த தகவல்கள் பொய் என்றால் தன் மீது வழக்கு போடட்டும் என்றும் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தங்க.தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.