ஆட்சியை கவிழ்க்க டிடிவி-யுடன் கூட்டு? – ஓபிஎஸ் பதில்

 

ஆட்சியை கவிழ்க்க டிடிவி-யுடன் கூட்டு? – ஓபிஎஸ் பதில்

ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரனுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறிய குற்றச்சாட்டு குறித்து ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்

திருச்சி: ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரனுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறிய குற்றச்சாட்டு குறித்து ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.

ஜெயலலிதா ம்மரைவுக்கு பின்னர் அக்கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. முதல்வராக இருந்த ஓபிஎஸ் திடீர் ராஜினாமா, ராஜினாமா செய்த கையுடன் மெரீனாவில் தியானம் செய்து கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது, கூவத்தூரில் எம்எல்ஏ-க்களை தங்க வைத்து ஆட்சி காப்பற்றப்பட்டது, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக பொறுபேற்க செய்து விட்டு சசிகலா சிறை சென்றது, பின்னர் தினகரன் ஓரங்கட்டப்பட்டு ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் அணிகள் இணைப்பு என இன்று வரை பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் அதிமுக பயணிக்கிறது.

அணிகள் இணைப்புக்கு பின்னர், ஓபிஎஸ் தரப்பினருக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என தகவல்கள் கசிந்து வந்தாலும், இரு தரப்பினரும் இன்றளவும் மனகசப்புகளை கடந்து செல்வது போன்ற தோற்றம் உள்ளது. எனினும், எடப்பாடி தரப்பு மீது ஓபிஎஸ் தரப்பு மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரனுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியதாக டிடிவி ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி குற்றச்சாட்டி முன் வைத்துள்ளார்.

முதல்வர் பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்ற கோரிக்கையுடன் 2017-ஆம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி, கோட்டூர்புரத்தில் உள்ள நண்பர் ஒருவரது இல்லத்தில் தினகரனை சந்தித்து ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தியதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். மேலும், கடந்த வாரம் கூட தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் நேரம் கேட்டதாகவும், இதற்கு ஆதாரம் உள்ளது எனவும் தங்க தமிழ்ச்செல்வன் வெளியிட்ட தகவல்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தங்க தமிழ்ச்செல்வன் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ்., தங்க தமிழ்ச்செல்வனின் பேட்டியை முழுமையாக பார்க்கவில்லை என்றும், பின்னர் விரிவாக விளக்கம் அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தினகரனை சந்தித்தது கடந்த காலம் எனவும் ஓபிஎஸ் அப்போது தெரிவித்தார்.