‘ஆடை’ படத்தை அஸ்திரமாக கையில் எடுத்த ராஜேஸ்வரி பிரியா: ராமதாஸை இப்பவும் பாலோ பண்ணுறாங்க போல..!

 

‘ஆடை’ படத்தை அஸ்திரமாக கையில் எடுத்த ராஜேஸ்வரி பிரியா: ராமதாஸை இப்பவும் பாலோ பண்ணுறாங்க போல..!

மக்களவை தேர்தல் கூட்டணி அறிவிப்புக்குப் பின் பாமகவிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய  ராஜேஸ்வரி பிரியா அமலா பாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்

மக்களவை தேர்தல் கூட்டணி அறிவிப்புக்குப் பின் பாமகவிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய  ராஜேஸ்வரி பிரியா அமலா பாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். 

இயக்குநர் ரத்தினகுமார் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடித்துள்ள திரைப்படம் ஆடை.  இதில் அமலா பால் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர்  சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், அதே சமயம் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது. இதையடுத்து  தணிக்கை குழுவால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்ட இந்த  திரைப்படம்  இம்மாதம் 19 ஆம் தேதி  திரைக்கு வரவுள்ளது. 

rajeswari

இந்நிலையில், அனைத்து அரசியல் மக்கள் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘வருகின்ற 19ஆம் தேதி அமலாபால் நடித்த ஆடை  திரைப்படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே அதன் டீசர் காட்சியை சர்ச்சையாக எங்கும்  பேசப்பட்டு வருகிறது. நிர்வாண காட்சியைப் பயன்படுத்தி  திரைப்படத்தை விளம்பரப்படுத்துவது சமுதாயத்தைச் சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளது ஏற்கனவே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ் திரைப்பட கதாநாயகர்களில் ஒருவராக பார்க்கப்படும் அமலாபால் இதுபோன்ற காட்சிகள் கொண்ட திரைப் படத்தில் நடித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. சுவரொட்டிகள் மற்றும் பிற விளம்பரங்களும் ஆபாச காட்சிகள்  இடம்பெறுவதற்குத் தடை விதிக்கவேண்டும். அப்படித் தடை விதிப்பதற்கு தங்களுக்கு ஏதாவது இடையூறு இருக்குமேயானால் நாங்கள் களத்தில் இறங்கி பெண்கள் பாதுகாப்பிற்காகவும் தமிழ் கலாச்சாரத்தைக் காப்பதற்காகவும் போராடுவதற்குத் தயாராக உள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

aadai

ஒரு படம் வெளியாவதற்கு முன்பே அது குறித்த கண்ணோட்டத்தைச் சுருக்கிக் கொள்வதோ அல்லது தனிப்பட்ட கருத்தை திரைப்படத்தின் மீதோ  அல்லது அதில் நடித்துள்ள நடிகர்கள் மீது பாய்வதோ ஏற்புடையது அல்ல. குறிப்பாக சமீபகாலமாக அரசியலுக்கு புதிதாக களம் காண வருபவர்களோ அல்லது மக்கள் எப்போதும் தங்களை குறித்து பேச வேண்டும் என்று விளம்பரத்திற்காகக் காத்திருப்பவர்களும்  சினிமா துறையை குற்றசாட்டி  வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

rajeswari

அந்த வகையில் பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏற்புடையது அல்ல என்று கூறி அக்கட்சியிலிருந்து விலகிய ஒரு சில நாட்கள் பரவலாக பேசப்பட்டு, செய்தியாளர்கள் சந்திப்பு, குற்றசாட்டு. அழுகை, கோபம் என வெளிப்படுத்தி வந்த ராஜேஸ்வரி பிரியா அனைத்து அரசியல் மக்கள் கட்சி  என்ற கட்சியை ஆரம்பித்தார். அதன்பிறகு ‘அந்தம்மா என்னாச்சு’ என்று யோசிக்க கூட நேரம் இல்லாமல் மக்கள் சுழன்று கொண்டிருக்கும்’ நிலையில் தற்போது ஆடை படத்தை கையிலெடுத்துள்ளார்  ராஜேஸ்வரி பிரியா.

ramadoss

இதுபோன்று நடிகர்களை வசைபாடி அன்றைய தலைப்பு செய்தியில் இடம்பெறுவது என்ற நடைமுறையை ஆரம்பித்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். அவர் வழியில் வந்த  ராஜேஸ்வரி பிரியாவுக்கு இதெல்லாம் சொல்லி தரவேண்டுமா என்ன?