ஆடையால் எழுந்த சர்ச்சை: முற்றுப்புள்ளி வைத்த ரஹ்மானின் மகள்!

 

ஆடையால் எழுந்த சர்ச்சை: முற்றுப்புள்ளி வைத்த ரஹ்மானின் மகள்!

ஆடை சுதந்திரம் தொடர்பாகத் எழுந்த விமர்சனங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா விளக்கமளித்துள்ளார்.

சென்னை: ஆடை சுதந்திரம் தொடர்பாகத் எழுந்த விமர்சனங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா விளக்கமளித்துள்ளார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஆஸ்கர் விருதுகளைப் பெற்று 10 ஆண்டுகள் நிறைவாகியுள்ளதைக் கொண்டாடுவதற்கான விழா பிப்ரவரி 5 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டனர்.

ரஹ்மானின் மகள் நிகழ்ச்சி முழுவதும் முகத்தைக்கூட மூடிக்கொண்டு புர்கா அணிந்திருந்தார். இது குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தது. ரஹ்மான் தன்னுடைய மகளை கட்டாயப்படுத்தி பர்தா அணிய சொல்வதாக பலரும் கூறியிருந்தனர். ரஹ்மான் வீட்டிற்குள் ஒரு மாதிரியும், வெளியே ஒரு மாதிரி நடந்து கொள்வதாகவும் பலரும் குற்றம்சாட்டினர். 

இந்நிலையில் ரஹ்மானின் மகள் கதிஜா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘தான் ஆடை அணிவதற்கு தன்னுடைய பெற்றோர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அனைத்தும் தன்னுடைய விருப்பம் சார்ந்ததே. நான் உடுத்தும் உடையோ அல்லது என் வாழ்க்கையில் நான் தேர்வு செய்யும் எந்த ஒன்றிற்கும் எனது பெற்றோர்களுக்கு கொஞ்சம்கூட சம்பந்தம் கிடையாது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். நான் முழுமையாக ஏற்று, சொந்த விருப்பத்துடன்தான் பர்தாவை அணிந்திருக்கிறேன்.என் வாழ்க்கையில் எது வேண்டுமென்பதைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு நான் பக்குவமடைந்து விட்டேன். எந்த ஒரு தனி மனிதனுக்கும் அவர்கள் எந்த உடையை அணிய வேண்டும், எப்படி வாழவேண்டும் என்ற சுதந்திரம் இருக்கிறது. அந்தச் சுதந்திரத்தைத்தான் நானும் அனுபவித்து வருகிறேன். நான் என்னவாக இருக்கிறேன் என்ற நிலை தெரியாமல், யாரையும் எடை போடாதீர்கள்’ என்று விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக ஏ.ஆர். ரஹ்மான் அவரது மனைவி மற்றும் மகள்கள் நிற்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டு  ‘எனது குடும்பப் பெண்கள் நிதா அம்பானியுடன் இருந்தபோது’ என்று கேப்ஷன் கொடுத்திருந்தார்.அதில் அவரது குடும்பப் பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அவரவர் விருப்பப்படி ஆடை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.