ஆசிரியர்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்துவதாக தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

 

ஆசிரியர்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்துவதாக தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அறவழி போராட்டத்தை தமிழக அரசு அலட்சியப்படுத்துவதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அறவழி போராட்டத்தை தமிழக அரசு அலட்சியப்படுத்துவதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என எச்சரித்திருந்தும் அவர்களது போராட்டம் தொடர்கிறது.

அரசு ஊழியர்களின் இந்த போராட்டம் 7-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இந்த போராட்டம் நீடிக்கும் பட்சத்தில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்ற அக்கறை இல்லாமல் தமிழக அரசு பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் தற்போதைய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், அறவழியில் போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு  கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், போராட்டத்தை தீவிரமாக்கும் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், உடனடியாக ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து மாணவர்களுக்கு கல்வி வழங்கும் சூழலை உருவாக்க வேண்டும் எனவும்  தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.