ஆசிரியருக்கு எதிராக புகார்! 9 வயது சிறுவனின் எதிர்காலத்தை நாசமாக்கிய பள்ளி நிர்வாகம்..

 

ஆசிரியருக்கு எதிராக புகார்! 9 வயது சிறுவனின் எதிர்காலத்தை நாசமாக்கிய பள்ளி நிர்வாகம்..

உத்தர பிரதேசத்தில், ஆசிரியருக்கு எதிராக புகார் கூறியதால், டி.சி.யில் ஒழுக்கமில்லாதவன் குறிப்பிட்டு 9 வயது சிறுவனின் எதிர்காலத்தையே பள்ளி நிர்வாகம் கேள்வி குறியாக்கியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஷட்ருளி. அந்த கிராமத்தில் உள்ள தொடக்கநிலை பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான் 9 வயது சிறுவன் ராஜா (பெயர் மாற்றம்). கடந்த மாதம் சிறுவன் ராஜா சக மாணவர்களுடன் சண்டை போட்டுள்ளான். இந்த தகவல் அந்த வகுப்பு ஆசிரியருக்கு தெரிந்து ராஜாவை கண்டித்தார்.

பள்ளி குழந்தைகள்

வீட்டுக்கு சென்ற சிறுவன் ராஜா தனது பெற்றோர்களிடம் ஆசிரியர் அடித்த தகவலை கூறியுள்ளான். இதனையடுத்து அந்த ஆசிரியர் குறித்து அந்த பள்ளியின் முதல்வரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் அந்த ஆசிரியர் மீது முதல்வர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட சிறுவன் ராஜாவின் பெற்றோர் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பையனை வேறு பள்ளியில் கொண்டு சேர்ப்போம் என்று மிரட்டி உள்ளனர்.

பள்ளியில் கண்டித்தல் மாதிரி

ஆனால் அதன் பின்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக சிறுவனின் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் பையனின் டி.சி.யை தரும்படி கேட்டுள்ளனர். உடனே பள்ளி முதல்வரும் டி.சி.யை கொடுத்து விட்டார். டி.சி.யை பார்த்து மாணவனின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த டி.சி.யில் மாணவன் ஒழுக்கம்இல்லாதவன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனையடுத்து இது தொடர்பாக கோண்டா மாவட்ட கல்வி அதிகாரியிடம் மாணவனின் பெற்றோர் புகார் கொடுத்தனர். கல்வி அதிகாரி விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை இது குறித்து கூறுகையில், ஆசிரியருக்கு எதிராக புகார் கொடுத்ததால், பள்ளி நிர்வாகம் இது போன்று டி.சி.யை கொடுத்து விட்டது. டி.சி.யில் ஒழுக்கமில்லாதவன் என்று குறிப்பிட்டு இருப்பதால் எந்த பள்ளியிலும் எனது பையனுக்கு அட்மிஷன் கிடைக்காது. பள்ளி முதல்வர் எனது மகனின் வாழ்க்கையில் விளையாடி விட்டார் என்று கண்ணீர் மல்க கூறினார்.