ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது வங்கதேசம்

 

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது வங்கதேசம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது

அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு நாடுகளான துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். அந்த வகையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் பாகிஸ்தான் – வங்கதேசம் ஆகிய அணிகள் மோதின. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் இந்த் போட்டி அபுதாபியில் நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, பாகிஸ்தான் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் சவும்யா சர்கார் ரன் ஏதும் எடுக்காமலும், மொமினுல் ஹக் 5 ரன்களிலும், லிட்டான் தாஸ் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய முஷ்பிகுர் ரஹிமும், முகமத் மிதுனும், நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 156 ரன்களை எட்டிய போது, முகமத் மிதுன் 60 ரன்களில் ஹசன் அலியின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். முஷ்பிகுர் ரஹிம் 99 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இறுதியாக, வங்கதேச அணி 48.5 ஓவரில் 239 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 240 ரன்கள் எடத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், 50 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை  இழந்து 202 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வருகிற 28-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் வங்கதேசம் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.