ஆசிய கோப்பையை வெல்லப் போவது யார்? இந்தியா – வங்கதேசம் இன்று பலப்பரீட்சை

 

ஆசிய கோப்பையை வெல்லப் போவது யார்? இந்தியா – வங்கதேசம் இன்று பலப்பரீட்சை

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேசம் ஆகிய அணிகள் இன்று மோதவுள்ளன

துபாய்: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேசம் ஆகிய அணிகள் இன்று மோதவுள்ளன.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு நாடுகளான துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். அந்த வகையில், இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காத இந்திய அணியும், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேச அணியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன.

இந்நிலையில், இந்தியா – வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறவுள்ளது. இந்திய அணி தோல்வியை சந்திக்கா விட்டாலும், குட்டி அணிகளுக்கு இடையே சற்றே தடுமாறியது. ஹாங்காங்குக்கு எதிரான லீக்கில் பெரும் போராட்டத்திற்கு பிறகே வெற்றி கிடைத்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியில் இருந்து தப்பித்து சமன் செயடஹ்து பெரிய விஷயமாகும். அதே நேரத்தில் வலுவான பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ள வங்கதேச அணி, இன்றைய போட்டியில் இந்தியாவுக்கு சவாலாகவே இருக்கும். இந்த போட்டியில், இந்திய வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். ஒருங்கிணைந்த முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வெற்றி வாய்ப்பை பெறலாம்.

இதுவரை இந்திய அணி 6 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. எனவே, 7-வது முறையாக கோப்பையை வெல்ல இந்திய அணி முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆசியக் கோப்பையை வெல்ல இரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.