ஆகஸ்ட் 1 முதல் ஐ.எம்.பி.எஸ். பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ரத்து- ஸ்டேட் வங்கி….

 

ஆகஸ்ட் 1 முதல் ஐ.எம்.பி.எஸ். பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ரத்து- ஸ்டேட் வங்கி….

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஐ.எம்.பி.எஸ். பரிவர்த்தனைக்கான கட்டணம் ரத்து அமலுக்கு வருவதாக ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள் மற்றொரு வங்கி கணக்குக்கு ஆர்.டி.ஜி.எஸ். மற்றும் என்.இ.எப்.டி. இணைய சேவைகள் மூலம் பணம் அனுப்பலாம். ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனை என்பது உடனடியாக பணப்பரிமாற்றம் செய்வதாகும். என்.இ.எப்.டி. என்பது குறிப்பிட்ட கால இடைவெளிகளில்தான் மொத்தமாக பணபரிமாற்றம் நடைபெறும். இதற்காக வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி கட்டணம் வசூலித்தது. வங்கிகள், அந்த கட்டணத்தை சேவை கட்டணம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களிடம் இருந்து கறந்து விடுகின்றன.

டிஜிட்டல் பரிவர்த்தனை

இந்நிலையில், அண்மையில் மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ஆர்.டி.ஜி.எஸ்., என்.இ.எப்.டி. பரிவர்த்தனைக்கான கட்டணத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. மேலும், கட்டண ரத்து பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதனையடுத்து பெரும்பாலான வங்கிகள் ஆர்.டி.ஜி.எஸ்., என்.இ.எப்.டி. சேவைகளுக்கான கட்டணத்தை விரைவில் ரத்து செய்து விடுவதாக கூறின.

இதனையடுத்து கடந்த 1ம் தேதி முதல் ஆர்.டி.ஜி.எஸ்., என்.இ.எப்.டி. சேவைகளுக்கு கட்டணம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான வங்கிகள் இன்னும் ஆர்.டி.ஜி.எஸ்., என்.இ.எப்.டி. சேவைகளுக்கான கட்டணத்தை ரத்து செய்யவில்லை. 

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் வங்கி கடந்த 1ம் தேதி முதல்  இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் யோனோ ஆப் வாயிலாக மேற்கொள்ளும் ஆர்.டி.ஜி.எஸ்., என்.இ.எப்.டி. பரிவர்த்தனைக்கான கட்டணத்தை ரத்து செய்தது. இந்நிலையில், ஐ.எம்.பி.எஸ். ( உடனடி பணப்பரிமாற்றம்) பரிவர்த்தனைக்களுக்கு சேவை கட்டணம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ரத்தாகிறது என ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. வரும் நாட்களில் மற்ற வங்கிகளும் சேவை கட்டண ரத்தை அமல் படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச்.டி.எப்.சி. வங்கி

தனியார் வங்கியான எச்.டி.எப்.சி. வங்கி 2017ம் ஆண்டு முதல் என்.இ.எப்.டி. பரிவர்த்தனைக்கு தனது வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் வசூலிப்பது கிடையாது. அதேசமயம் அந்த வங்கியின் கிளைகளில்  என்.இ.எப்.டி. பரிவர்த்தனைகள் மேற்கொண்டால் ரூ.1 லட்சம் வரையிலான தொகைக்கு ரூ.1 சேவை கட்டணமாக வசூலிக்கிறது.