அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரிசித்து தனம் பெற வேண்டிய கோயில்கள்

 

அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரிசித்து தனம் பெற வேண்டிய கோயில்கள்

கோமல் ஶ்ரீகிருபா கூபாரேஸ்வரர் கோயில்

அஸ்தம்:

கோயில்: கோமல் ஶ்ரீகிருபா கூபாரேஸ்வரர் கோயில்
அம்மன்: ஶ்ரீஅன்னபூரணி
தல வரலாறு: சிவனின் கண்களைப் பார்வதி கைகளால் பொத்தினாள். உலகமே இருளில் மூழ்கியது. அப்போது, சிவனும் தன் கையில் இருந்த ஹஸ்தாவர்ண ஜோதியில் மறைந்தார். சிவனைத் தேடி, அம்பாள் பசுவடிவில் பூலோகம் புறப்பட்டாள். அஸ்த நட்சத்திரத்தன்று சிவனை ஜோதிவடிவில் தரிசித்து ஐக்கியமானாள். பக்தர்கள் மீது கருணை(கிருபை) கொண்டவர் என்பதால் “ஶ்ரீகிருபா கூபாரேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். 
சிறப்பு: அஸ்த நட்சத்திரத்தினர் திங்கள், புதன்கிழமையில் வழிபடுவது நல்லது. அன்னபூரணி அம்பிகை பசுவாக இங்கு வந்ததால் பசு,கன்று தானம் அளிப்பது சிறப்பு.
இருப்பிடம்: கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குப் பிரியும் இடத்தில் இருந்து 8கி.மீ., தூரத்தில் கோமல்.
திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை 5.30- இரவு 7.30.

சித்திரை:

கோயில்: குருவித்துறை ஶ்ரீசித்திரரத வல்லபபெருமாள்
தாயார்: ஸ்ரீதேவி, ஶ்ரீபூமிதேவி 
தல வரலாறு: தேவகுரு பிரகஸ்பதியின் மகன் கசனை, அசுரகுரு சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானி திருமணம் செய்ய விரும்பினாள். கசனை அசுரலோகத்திலேயே கட்டாயப்படுத்தி இருக்கச் செய்தாள். மகனைக் காணாத பிரகஸ்பதி விஷ்ணுவை நோக்கி தவமிருந்தார். விஷ்ணு சக்கரத்தாழ்வார் மூலம் கசனை மீட்டார். இதையடுத்து சக்கரத்தாழ்வாரும், தேவ குருவும் ஒரே இடத்தில் அமர்ந்தனர். அதுவே குருவித்துறை தலம். 
சிறப்பு: பிரகஸ்பதிக்கு அருள்புரிய விஷ்ணு, சித்திர ரதத்தில், சித்திரை நட்சத்திரத்தன்று எழுந்தருளினார். எனவே, இக்கோயில் சித்திரைக்குரியதானது. வியாழன், பவுர்ணமி, சித்திரை நட்சத்திர நாட்களில் தரிசிப்பது சிறப்பு. 
இருப்பிடம்: மதுரையிலிருந்து 23 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 3- 6.

சுவாதி:

கோயில்: சித்துக்காடு ஶ்ரீதாத்திரீஸ்வரர் கோயில்
அம்மன்: ஶ்ரீபூங்குழலி
தல வரலாறு: படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா ஆகியோர் நெல்லிவனத்தில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டனர். சித்தர் தவமிருந்த பகுதியானதால் இப்பகுதி சித்தர்காடு, சித்துக்காடு என அழைக்கப்பட்டது. . நெல்லி மரத்தடியில் இருப்பதால் சிவனுக்கு “ஶ்ரீதாத்திரீஸ்வரர்’ என்று பெயர். “தாத்திரீ’ என்றால் “நெல்லி.
சிறப்பு: சுவாதி நட்சத்திரத்தினர் இங்கு சிவனை வழிபட்டால் செல்வ வளமிக்க வாழ்வு உண்டாகும். திருமணயோகம் விரைவில் கைகூடும். இங்கு குபேரருக்கு நெல்லிக்காய் ஊறுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து வழிபட்டால் யோகவாழ்வு அமையும். 
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லி- தண்டுரை வழியில் 8 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை 8- 10, மாலை 5-7

விசாகம்:

கோயில்: பண்பொழி திருமலை ஶ்ரீகுமாரசுவாமி கோயில்
தல வரலாறு: பூவன்பட்டர் என்ற அர்ச்சகரின் கனவில் முருகன் தோன்றி, புதையுண்டு கிடக்கும் சிலையை திருமலையில் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பந்தளமன்னர் கோயில் கட்டினார். மண்டபம் எழுப்புவதற்கான கற்களை, சிவகாமி பரதேசி என்ற முருக பக்தை, மலையடிவாரத்திலிருந்து வாழைமட்டை மூலம் இழுத்துச் சென்ற பெருமையுடையது. 
சிறப்பு: விசாகம் என்றால் “மேலான ஜோதி’. இந்த நட்சத்திரத்தின் ஒளிக்கிரணங்கள் இம்மலையில் படுவதால் விசாக நட்சத்திரத்தினர் வழிபட்டால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும். 
இருப்பிடம்: மதுரையிலிருந்து செங்கோட்டை 155 கி.மீ., அங்கிருந்து 7கி.மீ., தூரத்தில் கோயில். 
திறக்கும்நேரம்: காலை6- மதியம் 1, மாலை 5, இரவு 8.30.

அனுஷம்:

கோயில்: திருநின்றியூர் ஶ்ரீமகாலட்சுமிபுரீஸ்வரர் கோயில் 
அம்மன்: ஶ்ரீஉலகநாயகி
தல வரலாறு: ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை ரசித்தாள். இதை அறிந்த முனிவர் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமனிடம் கூறினார். பரசுராமனும் அவ்வாறே செய்து, தந்தையின் உதவியோடு மீண்டும் தாயை உயிர்பெறச் செய்தார். இந்த பாவம் நீங்க தந்தையும் மகனுமாக திருநின்றியூர் சிவனை வழிபட்டனர். 
சிறப்பு: பூமியில் புதைந்துபோன சிவலிங்கம், சோழமன்னனால் கண்டறியப்பட்டு ஒரு அனுஷ நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே இக்கோயில் அனுஷத்துக்கு உரியதானது. அனுஷ நட்சத்திர ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி பூஜையன்றும் சிறப்பு வழிபாடு செய்தால் செல்வவளம் உண்டாகும். 
இருப்பிடம்: மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை 4- இரவு 8.

கேட்டை:

கோயில்: பசுபதிகோயில் ஶ்ரீவரதராஜப்பெருமாள் கோயில்
தாயார்: ஶ்ரீபெருந்தேவி
தல வரலாறு: ராமானுஜரின் குருவான பெரியநம்பி, மார்கழி கேட்டையில் அவதரித்தவர். இவரது 105வது வயதில் சோழமன்னன் ஒருவன் ராமானுஜர் மீதிருந்த கோபத்தால் பெரியநம்பியின் கண்களைப் பறித்தான். அவர் பசுபதிகோயில் வரதராஜப் பெருமாளிடம் அடைக்கலம் புகுந்தார். அவரின் துன்பம் போக்கும் விதத்தில், பெருமாள் இங்கு மோட்சம் அளித்தார். 
சிறப்பு: பெரியநம்பியின் திருநட்சத்திர வைபவம் சிறப்பாக நடக்கும். கேட்டை நட்சத்திரத்தினர் வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாயன்று வரும் கேட்டையில் வழிபடுவது சிறப்பு.
இருப்பிடம்: தஞ்சாவூர்- கும்பகோணம் வழியில் 13கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை7- 9, மாலை 5.30- 7.30.