அவரு மட்டும் புது கட்சியை தொடங்கட்டும்… நான்தான் முதல்ல அதுல சேருவேன்! காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேச்சு

 

அவரு மட்டும் புது கட்சியை தொடங்கட்டும்… நான்தான் முதல்ல அதுல சேருவேன்! காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேச்சு

ஜோதிராதித்யா சிந்தியா புதுகட்சி தொடங்கினால் அதுல நான்தான் முதல்ல போய் சேருவேன் என மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ. பகிரங்கமாக தெரிவித்து இருப்பது அம்மாநில காங்கிரசுக்குள் உட்கட்சி பூசல் உச்ச கட்டத்தை எட்டியிருப்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கணிசமான இடங்களை வெல்வதற்கு காரணம் அந்த கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாதான். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வென்றதும் தனக்கு முதல்வர் பதவி  கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கட்சி தலைமை கமல்நாத்தை முதல்வராக்கியது. இது சிந்தியாவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

கமல் நாத்

சரி முதல்வர் பதவிதான் கிடைக்கவில்லை, மாநில தலைவர் பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அதற்கும், கமல்நாத், திக்விஜய சிங் போன்றவர்கள் முட்டுக்கட்டை போட்டனர். இதனால் சிந்தியா கடும் கோபத்தில் இருந்தார். இதற்கிடையே காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதனால் அவர் பா.ஜ.க.வுக்கு சென்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சிந்தியா தனது டிவிட்டர் புரோபைலில் காங்கிரஸ் கட்சிக்காரன் என்பதை நீக்கினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் புரோபைல் நீளமாக இருப்பதால் சுருக்கமாக வைத்தால் நன்றாக இருக்கும் என ஆலோசனை வந்ததால்தான் மாற்றினேன் என சிந்தியா விளக்கம் கொடுத்தார்.

திக்விஜய சிங்

இந்நிலையில் மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுரேஷ் ரத்கேடா, சிந்தியாவுக்கு ஆதரவாக பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி உள்ளது. மேலும், மத்திய பிரதேசத்தில் உட்கட்சி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளதை வெளிப்படையாக அம்பலப்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சுரேஷ் ரத்கேடா பேசியிருப்பதாவது: முதலாவதாக ஸ்ரீமந்த் மகாராஜ் சாஹேப் ( முன்னாள் அரச குடும்பத்தை சேர்ந்தவர் சிந்தியா) கட்சியை (காங்கிரஸ்) வெளியேறுவார் என நான் நினைக்கவில்லை. நான் உங்களுக்கு சொல்லி கொள்கிறேன் அவர் மத்திய பிரதேசத்தில் ஒரு சக்தி மற்றும் அவருக்கு சொந்த கட்சியை தொடங்கும் அதிகாரம் கொண்டவர். 

சுரேஷ் ரத்கேடா

அவர் அதனை செய்யும் (புது கட்சி தொடக்கம்) நாளில், நான் அவருடன் சேரும் முதல் நபராக இருப்பேன். அவர் எங்கு சென்றாலும் நான் அவரை பின் தொடர்வேன். கட்சி உச்சம்தான். ஆனால் அதனை காட்டிலும் எனக்கு மகாராஜ் சாஹேப் உச்சம். அவர் மரியாதைக்குரிய நபர் மற்றும் நான் அவருடைய வேலையாள். நான் எப்போதுமே எனது தலையை அவரது பாதத்தில் வைப்பேன் மற்றும் சேவை செய்வேன். அவருடைய அன்பு மற்றும் ஆதரவால்தான் நான் இன்று இந்த நிலையில் உள்ளேன். நாம் அவருடைய வேலையாட்கள் மற்றும் அவருக்கு எப்போதும் ஆதரவு அளிக்க வேண்டும் என எனது குழந்தைகளிடமும் கூறுவேன். இவ்வாறு அதில் பேசியுள்ளார்.