அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு – செல்ஃபி எடுத்தால் 2000 அபராதம்!

 

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு – செல்ஃபி எடுத்தால் 2000 அபராதம்!

சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஜன்னல் வழியாக வெளியே எட்டி செல்பி எடுக்க முயன்றாலோ அல்லது ரயில் தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுக்க முயற்சி செய்தாலோ ரூ.2000 அபராதம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

காரில் ஊட்டிக்கு செல்லவேண்டும் என விரும்பும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பம்கூட மேட்டுப்பாளையம் வந்து அங்கிருந்து மலைரயில்மூலம் ஊட்டிக்கு போகணும் என்பதாகத்தான் இருக்கும். மழைக்காலங்களில் மண்சரிவு போன்ற இயற்கை இடைஞ்சல்கள் ஒருபக்கம் என்றால், செல்ஃபி எடுக்குறேன் என்று ரயிலுக்கு முன்பாக நின்றுகொண்டு சில்லுண்டுகள் செய்யும் இம்சை தனிரகம். செல்போன் கண்டுபிடிச்சதே செல்ஃபி எடுக்கத்தான் என்ற தத்துவத்தை எங்கே கண்டுகொண்டார்களோ தெரியவில்லை. தமிழ்நாட்டில் யார்தான் இஞ்சினியர் இல்லங்கிற மாதிரி செல்போன் வச்சிருக்குற யார்தான் பி.சிஸ்ரீராம் இல்ல?

Train at Ooty station

எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு இல்லையா? இதுநாள்வரை பொறுத்துப்பார்த்த தென்னக ரயில்வே, இந்த செல்ஃபி மோகபிரியர்களுக்கு சூடு வைக்க துவங்கியிருக்கிறது. ஊட்டி ரயில் செல்லும்போது பயணிகள் செல்பி எடுக்க முயற்சி செய்வதும் , நீராவி எஞ்சினில் நீர் நிரப்ப மலைப் பகுதியில் ரயில் நிறுத்தும் போது தண்டவாளங்களில் நின்று புகைப்படம் எடுப்பதும் அசம்பாவிதங்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது போல. எனவே, சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஜன்னல் வழியாக வெளியே எட்டி செல்பி எடுக்க முயன்றாலோ அல்லது ரயில் தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுக்க  முயற்சி செய்தாலோ ரூ.2000 அபராதம் என தென்னக  ரயில்வே அறிவித்துள்ளது.