அல்லவை அகன்று நல்லவை பெருக்கும் குபேரன் வழிபாடு: வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் சேர்ந்து வருவதால் இன்று குபேர வழிபாடு நன்மை பயக்கும்

 

அல்லவை அகன்று நல்லவை பெருக்கும் குபேரன் வழிபாடு: வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் சேர்ந்து வருவதால் இன்று குபேர வழிபாடு நன்மை பயக்கும்

குபேரன் வழிபாடு:
 
இன்றைய தினம் வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் சேர்ந்து வருவதால் இன்று குபேரனை வழிபட சகல செல்வங்களும், சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை.
 
குபேரன் செல்வத்தின் அதிபதியாவார்.படைப்பின் கடவுளான பிரம்மாவின் மகனாக புலஸ்தியர் என்பருக்கும் திருவணவிந்து என்பவரது மகளுக்கும் பிறந்தவர் விஸ்ரவன் இவருடைய மகனே குபேரனாவார்.விஸ்ரவன் மற்றும் சப்தரிஷிகளில் ஒருவரான பாரத்துவாசரின் மகளான இலவித தேவிக்கும் பிறந்தவர் குபேரன். 
 
 
குபேரன் சிவனிடம் அதிக பக்தி கொண்டவர்.குபேரன் கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்டார். அவரது பக்திக்கு மெச்சிய சிவனும், பார்வதி சமேதராகக் காட்சி தந்தனர். குபேரனின் தவத்தையும், பூஜையையும் மெச்சி எட்டு திக்கு காவலர்களில் ஒருவராக குபேரனை சிவன் நியமித்தார்.சிவபக்தியின் காரணமாக சிவபெருமான் ஸ்வர்ண பைரவராக குபேரனுக்கு செல்வதினை நிர்வகிக்கும் பொறுப்பினை தந்தார்.
 
இவ்வாறு சிவனின் நண்பர் என்றும் பொருள் கொள்ளும் படியாக சிவசகா என்ற பெயரும் குபேரனுக்கு உண்டு.இவருக்கு ராவணன்,கும்பகர்ணன், விபீஷணன் என்ற ஒன்று விட்ட சகோதர்களும், சூர்ப்பனகை என்ற சகோதரியும் இருந்தனர்.பத்மம்,மஹாபத்மம்,மகரம்,கச்சபம்,குமுதம்,நந்தம்,சங்கம்,நீலம்,பத்மினி ஆகிய நவநிதிகளுக்கும் அதிபதி குபேரன். இவற்றுள் சங்க நிதி மற்றும் பதும நிதி இரண்டும் கூடிக்கொண்டே இருக்கும் நிதிகள் என்று நம்பப்படுகிறது. 
 
இந்த சங்க நிதி மற்றும் பதும நிதிகளின் அதிபதியான தெய்வ மகளீரை சங்க லட்சுமி,பதும லட்சுமி என்று அழைக்கின்றார்கள். இவர்கள் இருவரும் குபேரனின் மனைவிமார்கள் என்றும், இவர்களிடம் குபேரன் செல்வத்தினை கொடுத்து வைத்திருப்பதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.
 
 
இவருக்கு சித்திரலேகா என்ற மனைவியும், நளகூபன்,மணிக்ரீவன் என்று இரண்டு மகன்களும் உள்ளனர்.தேவர்களின் சிற்பியான விசுவகர்மா குபேரனுக்காக அழகாபுரி எனும் பட்டிணத்தினை படைத்துத்தந்தார். இந்தநகரம் குபேரபட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போதைய இலங்கையே பண்டைய நாளில் அழகாபுரியாக இருந்ததாக கருத்துண்டு.
 
குபேரபட்டினமான அழகாபுரியில் அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் மெத்தை,மீனாசனம் ஆகியவைகளின் மீது அமர்ந்து ஒரு கை அபயமுத்திரை,கிரீடம் முதலிய தங்க ஆபரணங்களுடன் முத்துக் குடையின் கீழ் சிம்மாசனத்தில் தனது தர்ம பத்தினியான யட்சியுடன் சேவை சாதிக்கிறார் குபேரன்.சிவந்த மேனியும் குள்ளமான உருவமும்,பெரிய வயிறும் உடையவராக குபேரன் சித்தரிக்கப்படுகிறார்.
 
 
திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக புராண கதைகளில் கூறப்படுகிறது.பத்மாவதி தாயாரை காதலித்த வெங்கடாஜலபதி,அவரை திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும்,அந்த கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
 
திருப்பாற்கடல் வந்த பிருகு முனிவர், தன்னை கண்டுகொள்ளாமல் அவமதித்ததாக மஹாவிஷ்ணு மார்பில் எட்டி உதைத்தார். அடி வாங்கியும் அமைதியான விஷ்ணுவோ, முனிவரின் காலை அழுத்தி பிடித்து விட்டார். இதை கண்டதும் முனிவர் தன் செயலுக்காக வெட்கப்பட்டார். மகாலட்சுமிக்கு கோபம் வந்தது. எட்டி உதைத்த முனிவரை சக்ராயுதத்தால் வெட்டி வீழ்த்தாமல், ஒத்தடம் கொடுக்கிறாரே என்று கோபத்துடன் வெளியேறி பூலோகத்தில் ஒரு அரண்மனை தோட்டத்தில் குழந்தையாய் கிடந்தாள்.
 
 
மன்னன் ஆகாச ராஜன் இந்த குழந்தையை தன் மகளாக வளர்த்தார்.மகாலட்சுமி இல்லாமல் வருந்திய விஷ்ணு, உடனே ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் வேடனாக பூலோகம் வந்தார். ஆகாசராஜனின் மகளாக, பத்மாவதி என்ற பெயருடன் மகாலட்சுமி வளர்வது கண்டு அவள் மீது காதல் கொண்டார். பத்மாவதிக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் முடிக்க சம்மதித்த ஆகாசராஜன்,பல கோடிக்கு சீதனம் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்.
 
உடனே ஸ்ரீநிவாசனான மஹாவிஷ்ணு குபேரனை அணுகி ஆயிரம் கோடி வராகன் கடனாக பெற்றார். இதற்காக ஒரு கடன் பத்திரமும் எழுதப்பட்டது. கலியுகம் முடியும் வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும் அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே நிபந்தனை.
 
அதர்மமான வகையில் கோடியை போடுவோர் காணிக்கையை வட்டியாகவும்,தர்ம வழியில் சம்பாதிப்போர் காணிக்கையை அசலின் ஒரு பகுதியாகவும் பெறுவது என்று ஏழுமலையான் முடிவு செய்தார்.
 
 
குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.மேலும் குபேர இயந்திரம்,குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.புத்த மதத்திலும் குபேரன் உண்டு.அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள்.ஜைன மதத்தில் குபேரனை சர்வானுபூதி என்று வழிபடுகின்றனர்.
 
குபேர வழிபாடு:
 
ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை:
 
செல்வம் விரைவாக கிடைக்க லட்சுமி குபேர பூஜை செய்யப்படுகிறது.இந்த பூஜையானது  தீபஒளி திருநாளான தீபாவளி நாளன்று கொண்டாடப்படுகிறது.
 
கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும்.
வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.
 
ஓம் ஹ்ரீம் க்ளீம் சௌம் ஸ்ரீம் கும் குபேராய நரவாகனாயயக்ஷ ராஜாய தன தான்யாதிபதியே லக்ஷ்மி புத்ராய ஸ்ரீம்  ஓம் குபேராய நமஹ !
 
 
 
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது மறக்காமல் குபேரலிங்கத்தை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
 
குபேரன் பற்றிய  சில தகவல்கள் :
 
குபேரன் தோன்றிய நாள்: வியாழக்கிழமை
 
ஜனன நட்சத்திரம்: பூசம் நட்சத்திரம்
 
பிடித்த  நைவேத்தியம்: ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் கலந்த பால்.வெல்லம், சர்க்கரை போன்ற இனிப்புகள்.
 
இந்தியாவில் குபேர விக்ரகம் உள்ள இடம் : நாசிக்
 
 
தமிழகத்தில் குபேர விக்ரகம் உள்ள இடம் : மதுரையிலுள்ள திருமங்கலத்தில்தான் முனீஸ்வரர் கோயிலில் குபேர விக்ரகம் தனியாக உள்ளது
 
தனிக்கோயில் : 
 
சென்னை அருகே,வண்டலூரில் இரத்தின மங்களத்தில் குபேரருக்கென்றே பிரத்தியேகமாக கோயில் அமைந்துள்ளது மேலும் பிள்ளையார் பட்டி அருகிலும் தனிக்கோவில் உள்ளது.