அலோக் வர்மா ஊழல் செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை: ஏ.கே. பட்நாயக் அதிர்ச்சி தகவல்!

 

அலோக் வர்மா ஊழல் செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை:  ஏ.கே. பட்நாயக் அதிர்ச்சி தகவல்!

முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ஊழல் செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மத்திய புலனாய்வு ஆணையத்தின் கண்காணிப்பாளரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஏ.கே பட்நாயக் தெரிவித்துள்ளார்.

புதுதில்லி: முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ஊழல் செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மத்திய புலனாய்வு ஆணையத்தின் கண்காணிப்பாளரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஏ.கே பட்நாயக் தெரிவித்துள்ளார்.

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. அவரது அதிகாரங்களைப் பறித்ததுடன், சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவை தற்காலிக சிபிஐ இயக்குநராகவும் மத்திய அரசு நியமித்தது.

தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என உத்தரவிட்டது.

alok verma

இதையடுத்து, புதுதில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றார். தொடர்ந்து, அலோக் வர்மா மீதான ஊழல் புகாரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நியமனக்குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டது.

இதனையேற்று, சிபிஐ இயக்குநர் பொறுப்பில் அலோக் வர்மா நீக்கப்பட்டு, மத்திய தீயணைப்புத்துறை குடிமை பாதுகாப்பு, ஊர்க்காவல்படை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து  சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா தனக்கு அளிக்கப்பட புதிய பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.  

ak

இந்நிலையில் மத்திய புலனாய்வு ஆணையத்தின் அறிக்கையில் உள்ள தகவல்களில் தன்னுடைய பங்கு எதுவும் இல்லை என அந்த ஆணையத்தின் கண்காணிப்பாளரான ஏ.கே பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘அலோக் வர்மாவிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த விசாரணை முழுக்க சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா அளித்துள்ள புகாரின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய புலனாய்வு ஆணையம் அளித்திருப்பது இறுதி அறிக்கையும் அல்ல. அதில் உள்ள தகவல்களில் என்னுடையது எதுவும் இல்லை’ என்றார்.