அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட்: தமிழக அரசு நடவடிக்கை

 

அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட்: தமிழக அரசு நடவடிக்கை

லஞ்சம் வாங்கியதாக கைதான அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

சென்னை: லஞ்சம் வாங்கியதாக கைதான அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள பழைய உற்சவர் சோமாஸ்கந்தர் சிலையை மாற்றி, புதிதாக உற்சவர் சிலை செய்ய இந்து அறநிலையத்துறை திட்டமிட்டது.

அதன்படி, சோமாஸ்கந்தர் சிலை 50 கிலோ எடையிலும், சிவகாமி சிலை 65 கிலோ எடையிலும் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதற்காக பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில், போலீசார் நடத்திய விசாரணையில், இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (திருப்பணி) கவிதா, ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மயிலாப்பூரில் உள்ள கவிதாவின்  வீட்டுக்கு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் சென்று அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் திருச்சி சிறையில் அடைத்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

புகாரில் சிக்கிய கவிதா சஸ்பெண்ட் செய்யப்படாமல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரது பொறுப்பு கூடுதல் ஆணையர் திருமகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, உயர் நீதிமன்றத்தில் கவிதாவை சஸ்பெண்ட் செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், லஞ்சம் வாங்கியதாக கைதான அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.