அருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்… எய்ம்ஸ் மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு…

 

அருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்… எய்ம்ஸ் மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு…

டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சரும், பா.ஜ.வின் மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டுதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. கடந்த 9ம் தேதியன்று திடீரென உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை

மூச்சு திணறல் பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதற்கு அடுத்தநாளே அருண் ஜெட்லியின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தற்போது உயிர்க்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் மற்றும் இதயம் சரியாக வேலை செய்யாத நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் Extracorporeal membrane oxygenation அருண்ஜெட்லிக்கும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த சூழ்நிலையில், அருண் ஜெட்லியின் உடல் நலம் குறித்து விசாரிக்க பல்வேறு தலைவர்கள் டெல்லி எய்ம்ஸ் படையெடுத்து வருகின்றனர். நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி பா.ஜ. எம்.பி. கவுதம் காம்பீர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், ராஜ்யசபா எம்.பி. சுபாஸ் சந்திரா மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி இரானி, ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து ஜெட்லியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து சென்றனர்.

முக்கிய தலைவர்கள் வருவதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் அருண் ஜெட்லியை பார்க்க வருவதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அதுகுறித்து தகவலும் வெளியாகவில்லை.