அரியலூர் பொன்பரப்பியில் குடியிருப்பு மீது தாக்குதல்; 8 பேர் காயம், 25 பேர் மீது வழக்குப்பதிவு!

 

அரியலூர் பொன்பரப்பியில் குடியிருப்பு மீது தாக்குதல்; 8 பேர் காயம், 25 பேர் மீது வழக்குப்பதிவு!

வாக்குச்சாவடி மையத்தின் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சின்னமான பானையை பாமக-வை சேர்ந்த சிலர் உடைத்ததாக கூறப்படுகிறது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் வீடுகள் மீது மற்றொரு சமூகத்தை சேர்ந்த நபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் நேற்று இரண்டாம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. சில இடங்களில் ஏற்பட்ட மோதல்களை தவிர மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

thirumavalavan pot

வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வாக்குச்சாவடி மையத்தின் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சின்னமான பானையை பாமக-வை சேர்ந்த சிலர் உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பை சேர்ந்தவரின் தலையில் பலத்த காயம் அடைந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, அந்த தரப்பினர் மற்றொரு தரப்பினர் வசிக்கும் பகுதிக்குள் சென்று அங்குள்ள வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். அங்குள்ள இரு சக்கர வாகனங்களும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், சம்பவம் தொடர்பாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தீவிரமடையாமல் இருக்க 150-க்கும் மேற்பட்ட போலீசார் 13 இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் வாசிங்க

தவறுதலாக பி.ஜே.பி.க்கு வாக்களித்ததால் விரலை வெட்டி எறிந்த ரோஷக்கார மனுஷன்…