அரசு விழாக்களை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதா? மா.கம்யூ., கடும் கண்டனம்!

 

அரசு விழாக்களை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதா? மா.கம்யூ., கடும் கண்டனம்!

அரசு விழாக்களை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது

சென்னை: அரசு விழாக்களை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: நாடாளுமன்றத்தேர்தல் அடுத்த ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படவுள்ளது. அரசியல் கட்சிகளுக்கிடையே தொகுதிப்பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு தேர்தல் பிரச்சாரப்பணிகள் துவங்கவுள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கலந்து கொள்கிற அரசு விழா இன்று 6-3-2019 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகிலுள்ள கிளாம்பாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் வழக்கம் போல தனி விமானத்தில் வருவதோடு, அவருக்கான பாதுகாப்பு பணியில் பல ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இந்நிகழ்ச்சிகளுக்கு மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவழிக்கப்படுகிறது.

modi, edappadi

ஆனால், இந்த விழா மேடைக்கு மிக அருகிலேயே பாஜக,  அதிமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கான பெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பாஜக, அதிமுக கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். இதேபோன்று கடந்த பிப்ரவரி 6 அன்று திருப்பூரில் அரசு விழா ஏற்பாடு செய்யப்பட்ட அதே மைதானத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு அதில் மோடி தேர்தல் பிரச்சார உரை நிகழ்த்தியுள்ளார்.  மார்ச் 1ம் தேதியன்று கன்னியாகுமரியிலும் இதுபோன்ற அரசு விழாவுடன் பாஜக பிரச்சார பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் எல்லையில் ஏற்பட்ட பதட்டத்தைக் காரணம் காட்டி கட்சி பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. 

கடந்த நான்கரை ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களின் பிரச்சனைகளையும், வேண்டுகோள்களையும் எள்ளளவும் கவனத்தில் கொள்ளவில்லை. கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களின் மக்கள், வரலாறு காணாத பாதிப்புக்குள்ளாகி பரிதவித்த போது, அம்மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்குக்கூட நரேந்திர மோடி வரவில்லை. ஆனால், தற்போது வாரந்தவறாமல் அரசு விழா என்ற பெயரில்  வருகை தந்து  தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வது நியாயமற்ற செயலாகும். பாஜக கூட்டணி அதிமுக கூட்டணி கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தனியாக கூட்டங்களை நடத்தி மேற்கொள்ள வேண்டுமே தவிர, அரசு விழா என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை செலவழித்து அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர்களைப் பயன்படுத்தி மேற்கொள்வது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இப்போக்கு ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதாகும்.

எனவே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மத்திய, மாநில அரசுகளின் வரம்பு மீறிய செயல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.