அரசு பேருந்து மீது தாக்குதல்: விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட போராட்டம்

 

அரசு பேருந்து மீது தாக்குதல்: விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட போராட்டம்

விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் காவல்துறை தடையை மீறி கோரிப்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை: விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் காவல்துறை தடையை மீறி கோரிப்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி முக்குலத்தோர் அமைப்புகள் மற்றும் அவை சார்ந்த அரசியல் கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. காவல்துறை அனுமதி மறுத்ததையடுத்து, தடையை மீறி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை வைகை எஸ்பிரஸ் ரயிலை மறித்து 50 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை 700-க்கும் அதிகமானோரை கைது செய்தது.

எனினும் காவல்துறை கட்டுப்பாட்டை மீறி 2000-க்கும் மேற்பட்டவர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பாக திரண்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அந்த வழியாக வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கினர். அரசு பேருந்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

மூவேந்தர் முன்னேற்றக் கழகம், முக்குலத்தோர் புலிப்படை, அகில இந்திய பார்வர்ட் பிளாக், தென்னிந்தியா பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைப்பினரும் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்காமல் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.