அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் உத்தரவு

 

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் உத்தரவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு  20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில், பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட போனஸ் வழங்கப்படுகிறது. 

அந்த வகையில், லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், 3 லட்சத்து 58 ஆயிரத்து 330 பேருக்கு 486 கோடியே 92 லட்சம் ரூபாய் போனஸ் தொகையாக வழங்கப்படுகிறது.

அதேபோல், வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வாரியம் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனசும், மின்சாரம், போக்குவரத்து , நுகர் பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனசும், நுகர் பொருள் வாணிப தற்காலிக ஊழியர்களுக்குக் கருணை தொகையாக ரூ. 3ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நஷ்டம் அடைந்த நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம், நிரந்தர தொழிலாளர்களுக்கு 8,400 ரூபாய் முதல் 16,800 ரூபாய் வரை போனஸ் வழங்கப்படும். மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணை தொகையாக வழங்கப்படும் என்றும் முதல்வரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.