அரசு அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு

 

அரசு அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு

தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்

சென்னை: தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வேற்று பெற்று அரியணை ஏறியது. இந்த அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதையடுத்து, வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் மக்களவைக்கு தேர்தல் நடைபெறலாம் என தெரிகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே, மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் சொந்த ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி மாதம் 28-ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. எஸ்.ஐ முதல் ஐ.ஜி.க்கள் வரை, தாசில்தார் முதல் ஆட்சியர்கள் வரை அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை தரவேண்டும் எனவும், இடமாற்றம் செய்து அதற்கான அறிக்கையை வருகிற 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.