‘அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்’ – சர்காருக்கு ஆதரவாக கமல்ஹாசன் ட்வீட்

 

‘அரசியல் வியாபாரிகள்  கூட்டம் விரைவில் ஒழியும்’ – சர்காருக்கு ஆதரவாக கமல்ஹாசன் ட்வீட்

சர்கார் திரைப்படத்திற்கு எதிராக போராடி வரும் அதிமுக அரசை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை: சர்கார் திரைப்படத்திற்கு எதிராக போராடி வரும் அதிமுக அரசை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம், முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளது. இதில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இதில் வரலட்சுமியின் கதாபாத்திரத்தின் பெயர் கோமலவள்ளி. பெற்ற தந்தைக்கே விஷம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கோமலவள்ளியின் கதாப்பாத்திரம் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, கோமளவள்ளி என்ற பெயர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்பதால் அதிமுகவிற்குள் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல், அரசின் இலவச திட்டங்கள் குறித்தும் சர்கார் திரைப்படத்தில் விமர்சிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர், தமிழகம் முழுவதும் சர்கார் திரையிடப்பட்டிருக்கும் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால், சில காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சர்கார் திரைப்படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், “முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார்  படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை  ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள்  கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்” என்று பதிவிட்டுள்ளார்.