அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்வது ராணுவத்தின் வேலையில்லை- கொந்தளித்த ப.சிதம்பரம்

 

அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்வது ராணுவத்தின் வேலையில்லை- கொந்தளித்த ப.சிதம்பரம்

தலைமை தொடர்பான ராணுவ தளபதி கருத்துக்கு, அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்வது ராணுவத்தின் வேலையில்லை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

புதுடெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராணுவ தளபதி பிபின் ராவத் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை நிகழ்வது தொடர்பாக கருத்து தெரிவித்தார். அவர் இது குறித்து கூறுகையில், தலைமை என்பது முன்னணியில் உள்ளது. நீங்கள் முன்னேறும் போது எல்லோரும் உங்களை பின் தொடர்கிறார்கள். தலைவர்கள்தான் மக்களை சரியான திசையில் கொண்டு செல்வார்கள் தலைவர்கள் மக்களை தவறான பாதையில் வழி நடத்தமாட்டார்கள். 

பிபின் ராவத்

அதிக அளவில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். நகரங்களில் வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்களை நிகழ்த்த அவர்களை வழிநடத்துவது நல்ல தலைமை அல்ல என தெரிவித்தார். அடுத்த சில மணி நேரங்களில் எதிர்க்கட்சிகள் வரிசையாக பிபின் ராவத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

மாணவர்கள் போராட்டம்

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்த போது கூறியதாவது: டி.ஜி.பி. மற்றும் ராணுவ தளபதி ஆகியோர் அரசுக்கு ஆதரவு கேட்டுக் கொள்வது அவமானகரமானது. நீங்க ராணுவ தளபதி மற்றும் உங்க வேலையை மட்டும் பாருங்க என தளபதி ராவத்திடம் கேட்டுக்கொள்கிறேன். அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்வது ராணுவத்தின் வேலையல்ல. எப்படி யுத்தம் செய்ய வேண்டும் என்பதை சொல்லுங்க.

யுத்த களம்

அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டுமோ அதை அரசியல்வாதிகள் செய்வார்கள். அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்வது ராணுவத்தின் வேலையில்லை. எப்படி போர் புரிய வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்வது எங்கள் வேலையில்லை. நீங்கள் யுத்தத்தில் ஈடுபடுகிறீர்கள் என்றால், நாங்கள் நீங்கள் எப்படி யுத்தம் செய்ய வேண்டும் என சொல்லமாட்டோம். உங்கள் யோசனைப்படி நீங்கள் யுத்தம் செய்வீர்கள் மற்றும் நாட்டின் அரசியலை நாங்கள் நிர்வகிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.