அரசியலும் போச்சு… எதிர்காலமும் சூனியம்… ஓபிஎஸ் தம்பி டண்டணக்கா!

 

அரசியலும் போச்சு… எதிர்காலமும் சூனியம்… ஓபிஎஸ் தம்பி டண்டணக்கா!

அதிமுகவில் இருந்து ஓ.ராஜா நீக்கப்பட்டிருப்பதாலும் வேறு கட்சிகளிடமிருந்து எந்த வரவேற்பும் இல்லாத நிலையில் அவரது அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டதோ என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. 

சென்னை: அதிமுகவில் இருந்து ஓ.ராஜா நீக்கப்பட்டிருப்பதாலும் வேறு கட்சிகளிடமிருந்து எந்த வரவேற்பும் இல்லாத நிலையில் அவரது அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டதோ என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. 

அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகக் கூறி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நீக்கப்பட்டார். இதனையடுத்து ஓ.ராஜா அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிமுக-வில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு அமமுகவில் இடமில்லை என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஷட்டரை மூடிவிட்டதால் அங்கும் செல்ல முடியாத பரிதாப நிலையில் ராஜா உள்ளார். 

மதுரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தேர்தலில் நடந்த முறைகேடுகள் செய்ததாக ராஜா மீது குற்றச்சாட்டு உள்ளது. அதனடிப்படையில்தான் அதிமுகவில் இருந்தும் விசிறியடிக்கப்பட்டார். எனவே இந்த புகாரை சரி செய்யாத பட்சத்தில் தனக்கு அமமுகவில் தினகரன் நிச்சயம் இடம் தரமாட்டார் என்பதை ராஜா புரிந்து கொண்டுள்ளார்.

தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் அமமுக முகாமில் இருந்து வெளியேறி திமுகவில் இணையப்போகிறார் என்ற செய்திகள் அடிபடும்நிலையில் அவருடன் சேர்ந்து திமுகவில் சேரமுடியுமா என்ற யோசனையிலும் இருக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பேயில்லை என தேனி மாவட்ட திமுக சார்பில் கூறப்படுகிறது.

அண்ணனும் அரசியலில் கைவிட்டுவிட்டார், அமமுகவிலும் இடமில்லை. திமுக பக்கமே சாயமுடியாது. சொந்த ஊரிலோ மக்கள் மத்தியில் அரசியல் வாய்ஸும் இல்லை. இந்த நிலையில், ஜெயலலிதா மரணமடைவதற்கு முன்பே ராஜா மீது எழுந்த கொலைக்குற்றச்சாட்டு புகார் இன்னும் உயிருடன்தான் இருக்கிறது.

அரசியல் வாழ்க்கையே அஸ்தமனமான நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாறி உதயசூரியன் உதித்தால் தனது வாழ்வில் இருள் கவிந்துவிடுமோ என்ற அச்சத்தில் நாட்களை எண்ணத்தொடங்கிவிட்டார் ஓ.ராஜா என அவரது நெருங்கிய வட்டாரத்துக்குள் கலக்கத்துடன் பேச்சு எழுந்துள்ளது.