அரசின் அக்கறையின்மை; தெலங்கானாவில் அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை!

 

அரசின் அக்கறையின்மை; தெலங்கானாவில் அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை!

மாணவர்கள், பெற்றோர்கள் தயக்கமில்லாமல் அரசின் இலவச சேவையை அழைக்கலாம். உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள் என 24 மணி நேரமும் ஆலோசனை வழங்க காத்திருக்கின்றனர்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 உள்ளிட்ட பொதுத்தேர்வு முடிவுகள் வரும் போதும், குறைவான மதிப்பெண் அல்லது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.

students

பெற்றோர், அக்கம் பக்கத்தாரின் ஏளன பேச்சுக்கு ஆளாவதால் மனசோர்வு அடையும் மாணவர்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை சற்றும் யோசிக்காமல் எடுத்து விடுகின்றனர். வாழ்க்கையில் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காரணியாக கல்வி இருக்குமே தவிர, கல்வி மற்றும் மதிப்பெண்கள் மட்டுமே எவரது எதிர்காலத்தையும் நிர்ணயிப்பதில்லை. இதனை அறியாமல் ஏராளமான மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்து கொள்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும்.

இதைதவிர்க்க மாணவர்கள், பெற்றோர்கள் தயக்கமில்லாமல் அரசின் இலவச சேவையை அழைக்கலாம். உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள் என 24 மணி நேரமும் ஆலோசனை வழங்க காத்திருக்கின்றனர். பெற்றோர்கள் மற்றும் பள்ளியின் பங்கு இதில் முக்கியம் என்பதால் மதிப்பெண்களை நோக்கி குழந்தைகளை அவர்கள் நகர்த்துவதை தவிர்க்க வேண்டும்.

students

ஆனால், தெலங்கானா மாநிலத்தில் வெளியாகியுள்ள பிளஸ்1, பிளஸ்2 உள்ளிட்ட இடைநிலை தேர்வு முடிவுகள் அதிர்சியடைய செய்துள்ளது. கடந்த வியாழக்கிழமை தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இதுவரை அம்மாநிலத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை ஊருப்பினரின் உறவினர் ஒருவரும் அடங்குவார்.

மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவதால், ஹுசைன் சாகர் ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகமாக இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு முடிவுகள் வந்த நாளில் இருந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில் மாணவர்களை மீட்டு, அவர்களது பெற்றோருக்கு முதலில் ஆலோசனைகளை வழங்கி, அடுத்து மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிய பின்னர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைப்போம் என காவல் ஆய்வாளர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

students

அதேசமயம், மாணவர்களின் உயிரிழப்புகள் சிதைந்து போன கல்வி அமைப்பிற்கு எடுத்துக்காட்டு எனவும், தேர்வுகளில் வெற்றி பெறவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் கடுமையான அழுத்தத்தை மாணவர்கள் சந்திப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் இடையே நிலவும் போட்டி காரணமாக மாணவர்கள் சுமார் 16 முதல் 18 மணி நேரம் படிப்பதற்கு நிர்பந்திக்கப்படுகின்றனர். இதனால், அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

கடந்த ஆண்டில் தெலங்கானா வித்யார்த்தி வேதிகா எனும் அமைப்பு ஸ்ரீ சைதன்யா மற்றும் நாராயணா பள்ளிகளை தடை செய்ய வேண்டும் என கையெழுத்திடும் மனுவை Change.org-ல் ஆன்லைன் மூலமாக மேற்கொண்டது. தேர்வு முடிவுகளுக்கு பின்னரும் கையெழுத்திடப்பட்டு வந்த அந்த மனுவில் சுமார் 1,30,000 பேர் கையெழுத்திட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

students

கல்வி நிறுவனங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வழக்கை போலீசார், சட்டப்பிரிவு 174-ன் கீழ் மட்டுமே பதிவு செய்கின்றனர். பெற்றோர்களும் புகார் அளிக்க முன்வராததால் கல்வி நிறுவனங்களுக்கு அது சாதகமாக முடிந்து விடுகிறது எனவும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். அத்துடன் இதையெல்லாம் கருத்தில் கொண்டு இதுவரை அக்கறை இல்லாமல் இருக்கும் அரசு, இதற்கு மேலும் அப்படி இருக்காமல் தகுந்த நடவடிக்கை எடுக்கக் வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

**தற்கொலை குறித்த எண்ணம் தோன்றும் மாணவர்கள் அதில் இருந்து விடுபட ஆலோசனைக்கு உதவி மையமான ரோஷினியை, 040 66202000/2001 என்ற எண்ணில் நாள்தோறும் காலை 11 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

இதையும் வாசிங்க

கார் விபத்தில் மகனை காப்பாற்றிய தாய்; 27 ஆண்டுகளுக்கு பின் கோமாவில் இருந்து மீண்ட அதிசயம்!