அயோத்தி வழக்கு தீர்ப்பு எந்த மாதிரி வந்தாலும் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள்! ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள்

 

அயோத்தி வழக்கு தீர்ப்பு எந்த மாதிரி வந்தாலும் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள்! ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள்

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஒவ்வொருவரும் அதனை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள் விடுத்துள்ளது.

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாடா மற்றும் ராம் லீலா ஆகிய அமைப்புகள் சமமாக பிரித்து கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்தியஸ்த முயற்சி தோல்வி கண்டதால் உச்ச நீதிமன்றம் இந்த விசாரணையை தீவிரப்படுத்தியது.

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம்

உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி  முதல்  அயோத்தி வழக்கு விசாரணை தினந்தோறும் நடந்து வந்தது. 40 நாட்களாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு விசாரணை கடந்த 16ம் தேதி நிறைவடைந்தது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்தது. நவம்பர் 4-17ம்  தேதிக்குள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உச்ச நீதிமன்றம்

இந்நிலையில் அயோத்தி வழக்கு தீர்ப்பு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தனது டிவிட்டர் பக்கத்தில், ஸ்ரீ ராமஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் அடுத்த சில நாட்களில் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு என்னவாக இருந்தாலும், ஒவ்வொருவரும் அதனை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நாட்டின் நிலவரத்தை சுமூகமாக வைத்திருப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என பதிவு செய்து இருந்தது.