அயோத்தி நிலத்தை இந்து சகோதரர்களிடம் முஸ்லிம்கள் ஒப்படைக்க வேண்டும்- முஸ்லிம் பல்கலைகழக துணை வேந்தர்

 

அயோத்தி நிலத்தை இந்து சகோதரர்களிடம் முஸ்லிம்கள் ஒப்படைக்க வேண்டும்- முஸ்லிம் பல்கலைகழக துணை வேந்தர்

நாட்டில் அமைதி நீடிக்க, அயோத்தி நிலத்தை இந்து சகோதரர்களிடம் முஸ்லிம்கள் ஒப்படைக்க வேண்டும் என அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராம் ஜென்மபூமி-பாபர் மசூதி பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதுதான் தற்போது பிரச்னை. உச்ச நீதிமன்றம் தற்போது இந்த வழக்கை தினமும் விசாரித்து வருகிறது. இம்மாதம் 18ம் தேதிக்குள் இந்த வழக்கு தொடர்பான வாதங்களை முடிக்கும்படி மனுதாரர்களிடம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆக, பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்து வந்த அயோத்தி வழக்குக்கு ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீீதிமன்றம்

இந்நிலையில், அயோத்தி நிலத்தை இந்து சகோதரர்களிடம் முஸ்லிம்கள் ஒப்படைக்க வேண்டும் என அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள்  துணை வேந்தர் ஜமீர் உதின் ஷா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தெளிவான தீர்ப்பு வழங்க வேண்டும். அது பஞ்சாயத்தாக இருக்க கூடாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக வந்தாலும் அங்கு மசூதியை கட்ட சாத்தியம் உள்ளதா? அது சாத்தியம் இல்லாதது.

அயோத்தி பிரச்னை

முஸ்லிம்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும், நாட்டின் அமைதி நீடிக்க முஸ்லிம்கள் அந்த நிலத்தை இந்து சகோதரர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதான் இதற்கு தீர்வு இல்லையென்றால் தொடர்ந்து போராட வேண்டும். நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்னை முடித்து கொள்வற்கு நான்  ஆதரவு அளிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.