அயோத்திக்கு பதிலாக ராகுல் காந்தியுடன் ஹஜ் யாத்திரை போகலாம்….. உத்தவ் தாக்கரேவை கிண்டலடித்த பா.ஜ.க.

 

அயோத்திக்கு பதிலாக ராகுல் காந்தியுடன் ஹஜ் யாத்திரை போகலாம்….. உத்தவ் தாக்கரேவை கிண்டலடித்த பா.ஜ.க.

அயோத்திக்கு பதிலாக ராகுல் காந்தியுடன் ஹஜ் யாத்திரை போவது உத்தவ் தாக்கரேவுக்கு பொருத்தமாக இருக்கும் என அவரை பா.ஜ.க. தலைவர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கிண்டல் அடித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வுடான 35 ஆண்டு கால கூட்டணி முறித்து கொண்ட சிவ சேனா, தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. தற்போது மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளார். 

ராகுல் காந்தி

மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசின் 100 நாட்கள் நிறைவை முன்னிட்டு, வரும் மார்ச் 7ம் தேதியின்று உத்தவ் தாக்கரே அயோத்திக்கு சென்று ராமரை வணங்குவார் சிவ சேனா அறிவித்தது. மேலும், அவருடன் கூட்டணியை  சேர்ந்த அமைச்சர்களும் அயோத்தி செல்வர் என சிவ சேனாவின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத் தெரிவித்தார். உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணத்தை பா.ஜ.க. கிண்டல் அடித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க.வின் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கூறியதாவது:

ஜி.வி.எல். நரசிம்ம ராவ்

தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் உத்தவ் தாக்கரே உள்ளார். காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் கருணையால் மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே உள்ளார். அவர்கள் திருப்தி அரசியலை பின்பற்றுபவர்கள். உத்தவ் தாக்கரே அயோத்தி சென்று பாவத்தைதான் செய்ய போகிறார். அவரது வருகையால் யாருக்கும் பலன் இல்லை. அயோத்திக்கு செல்வதற்கு பதில், ஹஜ் யாத்திரைக்கு முன்பதிவு செய்து  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் உத்தவ் தாக்கரே அங்கு செல்லலாம். இதுதான் அவருடைய (உத்தவ் தாக்கரே) தற்போதைய அரசியலுக்கு பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் தனது தந்தை செய்த இந்துத்வா அரசியலை உத்தவ் தாக்கரே பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. சில வாரங்கள் முன்பு வரை அவரது கட்சி இந்துத்துவாவை பின்தொடர்ந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.