அம்மாவை மீட்டு தாருங்கள்: காடுவெட்டி குருவின் மகன் ராமதாஸிடம் கோரிக்கை!

 

அம்மாவை மீட்டு தாருங்கள்: காடுவெட்டி குருவின் மகன் ராமதாஸிடம் கோரிக்கை!

தன் அம்மாவை அவரது உறவினர்கள் சிறை வைத்துள்ளனர் என்று கூறியுள்ள காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், அவரை பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டுபிடித்து காடுவெட்டிக்கு அழைத்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் : தன் அம்மாவை அவரது உறவினர்கள் சிறை வைத்துள்ளனர் என்று கூறியுள்ள காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், அவரை பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டுபிடித்து காடுவெட்டிக்கு அழைத்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வன்னியர் சங்கத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு, கடந்த மே 25ஆம் தேதி காலமானார். இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் ஒலக்கூரில் அமைந்துள்ள வன்னியர் சங்க கல்வி அறக்கட்டளை வளாகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் குருவின் முழு உருவச் சிலை திறந்துவைக்கப்பட்டது. ஆனால் இந்நிகழ்வில் குருவின் மனைவி சொர்ணலதா, மகன் கனலரசன் ஆகியோர் மட்டுமே கலந்துகொண்டனர். அவரது உறவினர்கள் யாருமே கலந்துகொள்ளவில்லை. 

இந்த நிலையில் தனது தாயை கண்டுபிடித்து அழைத்து வர வேண்டும் என்று குருவின் மகன் கனலரசன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக கனலரசன் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘எனது அப்பா மறைந்ததிலிருந்து எனது அம்மா மனவருத்தத்தில் இருந்து வந்தார். அவருக்கு ஆறுதலாக இருக்கும் என்று கூறி, அவருடைய பிறந்த வீட்டுக்கு மூன்று நாட்கள் அனுப்பி வைத்திருந்தேன். ஆனால் போன இடத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை, நான் அவரைப் பார்க்கும்போதெல்லாம், எனது அம்மாவிடம் அவரது உறவினர்கள் என்னை சரியாக பேசவிடுவதில்லை. என் அம்மா என்னிடம் பதட்டமாகவே பேசிக்கொண்டிருந்தார். தற்போது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. என் அம்மாவை எங்கு வைத்துள்ளனர், என்ன செய்கின்றனர் என்று கூட எனக்குத் தெரியவில்லை. என் அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. சமூக வலைதளங்களில் என் அம்மா எழுதியதாக வெளியாகியுள்ள கடிதமும் யார் எழுதினார் என்று தெரியவில்லை. அவரை மிரட்டிக் கையெழுத்து வாங்கியுள்ளனர். அதனால்  தன் அம்மாவை ராமதாஸ் ஐயா தான் கண்டுபிடித்து காடுவெட்டியிலுள்ள எங்கள் வீட்டுக்கு அழைத்து வர வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.