அம்பை எடுத்து குறி பார்த்த சென்டினல்; பேக் அடித்த போலீசார் விழி பிதுங்கல்

 

அம்பை எடுத்து குறி பார்த்த சென்டினல்; பேக் அடித்த போலீசார் விழி பிதுங்கல்

சென்டினல் தீவை நெருங்கிய போலீசாரை பார்த்து பழங்குடியின மக்களில் ஒருவர் தனது அம்பை எடுத்து குறி பார்த்ததும் அங்கிருந்து தங்களது படகை திருப்பி ஒருவழியாக மீண்டும் கரை சேர்ந்துள்ளனர் போலீசார்

அந்தமான்: சென்டினல் தீவை நெருங்கிய போலீசாரை பார்த்து பழங்குடியின மக்களில் ஒருவர் தனது அம்பை எடுத்து குறி பார்த்ததும் அங்கிருந்து தங்களது படகை திருப்பி ஒருவழியாக மீண்டும் கரை சேர்ந்துள்ளனர் போலீசார்.

அந்தமான் தீவுக்கூட்டங்களில் ஒன்றான சென்டினல் தீவு வெளியுலகினருடன் எந்த தொடர்பும் இல்லாமல் உள்ளது. இந்த தீவில் வாழும் பழங்குடியின மக்களை  பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவித்துள்ள மத்திய அரசு, வடக்கு சென்டினல் தீவுக்கு அன்னியர்கள் யாரும் செல்வதற்கும் தடை விதித்து உள்ளது. இதையும் மீறி செல்பவர்கள் பழங்குடியின மக்களின் அம்புகளுக்கும், கூர்மையான ஆயுதங்களுக்கும் இரையாவதை தவிர வேறு வழியில்லை.

அந்த வகையில் சென்டினல் தீவுக்கு மீனவர்களின் உதவியுடன் அத்துமீறி சென்ற அமெரிக்க கிறிஸ்தவ மத போதகர் ஆலன் காவ், சென்டினல் பழங்குடிகளால் கொல்லப்பட்டார். மேலும், ஆலனில் உடலை கடற்கரை மணலில் அவர்கள் புதைத்ததாக தூரத்தில் இருந்து பார்த்த மீனவர்கள் கூறியுள்ளனர்.

அதேசமயம், ஆலனின் உடலை மீட்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதால், அவரது உடலை மீட்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், எந்த விதத்திலும் வெளியுலகினர் சென்டினல் பழங்குடிகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஆலனின் உடலை மீட்க சென்ற போலீசார், தீவில் இருந்து சுமார் 400 அடி தொலைவில் படகை நிறுத்திவிட்டு தீவை நோட்டமிட்டுளனர். அப்போது, காட்டுக்குள் இருந்து வந்த பழங்குடி ஒருவர் படகை நோக்கி அம்பெய்த குறிபார்த்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்து தங்களது படகை திருப்பிக் கொண்டு போலீசார் மீண்டும் கரை சேர்ந்துள்ளனர்.

கடந்த 2006-ஆம் ஆண்டு சென்டினல் தீவு அருகே தெரியாமல் ஒதுங்கிய இரண்டு மீனவர்களை அவர்கள் கொன்றனர். பின்னர், சில நாட்கல் கழித்து மூங்கிலில் கட்டிய நிலையில், அவர்களது சடலம் கடலில் மிதந்துள்ளது. அது போல தற்போதும் பழங்குடிகள் செய்வார்கள் எனில், ஆலனின் சடலத்தை போலீசார் எளிதாக மீட்டு விடுவார்கள். இல்லையெனில் சற்று சிரமமே…