அம்பேத்கர் சிலை சிதைத்த சக்திகளை வேரறுத்திடவேண்டும்: தலைவர்கள் கண்டனம்!

 

அம்பேத்கர்  சிலை சிதைத்த சக்திகளை வேரறுத்திடவேண்டும்: தலைவர்கள் கண்டனம்!

வேதாரண்யத்தில் அம்பேத்கர்  சிலை உடைக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

நாகை: வேதாரண்யத்தில் அம்பேத்கர்  சிலை உடைக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

நாகை  மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பினருக்கு இடையே  ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் கொளுத்தப்பட்டது. காவல் நிலையம் தாக்குதலுக்கு ஆளான நிலையில் அப்பகுதியிலிருந்த அம்பேத்கர் சிலையும் உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

 

சேதமடைந்த அம்பேத்கர்  சிலைக்கு பதிலாக அரசு தரப்பில் வேறு புதிய சிலையானது நிறுவப்பட்டது. இந்நிலையில் அம்பேத்கர் சிலை உடைப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை வேதாரண்யத்தில் வஞ்சக நெஞ்சம் கொண்ட வன்முறையாளர் சிலர் சிதைத்த செயலுக்கு கடும் கண்டனம்! தமிழகம் முழுவதும் இத்தகைய சக்திகளை வேரறுத்திட அதிமுக அரசு வேகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும்!! ‘என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதே போல் பாமக நிறுவனர் ராமதாஸ், ‘நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அண்ணல் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. அம்பேத்கர் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவர். அவரது உருவச்சிலை சேதப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது! அண்மைக்காலங்களில் தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவது அதிகரித்துவருகிறது. சிலைகளைச் சேதப்படுத்துவதன் மூலம் யாரையும் சிறுமை படுத்திவிட முடியாது. இப்போக்கு தடுக்கப்பட வேண்டும்.அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

விடுதலை சிறுத்தைகள் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன், அம்பேத்கர் சிலையை உடைத்தவர்கள் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்றும் சாதி பயங்கரவாதிகளைத் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். தலைவர்கள் சிலையை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க தனிச்சட்டம் இயற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசிக முறையிட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.