அமைச்சர்கள் வேலை செய்ய தயாராக இல்லை….. ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ….. எந்த நேரத்திலும் கவிழும் நிலையில் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு…

 

அமைச்சர்கள் வேலை செய்ய தயாராக இல்லை….. ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ….. எந்த நேரத்திலும் கவிழும் நிலையில் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு…

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹர்தீப் சிங் டாங் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி உள்ளார். மேலும் மாயமான 3 எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விடும்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தின் மொத்தமுள்ள 230 சட்டப்பேரவை உறுப்பினர்களில் கமல் நாத் அரசுக்கு 120 பேர் ஆதரவு உள்ளது.  இதில் 114 பேர் காங்கிரஸை சேர்ந்தவர்கள். மேலும் பகுஜன் சமாஜ் , சமாஜ்வாடி மற்றும் சுயேட்சே எம்.எல்.ஏ.க்களும் ஆதரவாக உள்ளனர். அதேசமயம் பா.ஜ.க.வுக்கு 107 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளது.

முதல்வர் கமல் நாத்

சமீபகாலமாக மத்திய பிரதேசத்தில் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்து விடும் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று காங்கிரஸை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. தன் பக்கம் இழுத்து மறைத்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் டெல்லி அருகே உள்ள குர்கானில் உள்ள ஹோட்டலில் வைக்கப்பட்டு இருந்த 6 எம்.எல்.ஏ.க்களை மீட்டதாக காங்கிரஸ் தெரிவித்தது.

ஹர்தீப் சிங் டாங்

இந்நிலையில் மாயமான 4 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ஹர்தீப் சிங் டாங் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகருக்கு நேற்று அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், இரண்டாவது முறையாக மக்களின் உத்தரவு கிடைத்தபோதிலும், கட்சியால் நான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறேன். ஊழல் நிறைந்த அரசாங்கத்தின் ஒரு பகுதியாக  இருப்பதால் அமைச்சர்கள் யாரும் வேலை செய்ய தயாராக இல்லை என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல். ஹர்தீப சிங் டாங்கை தொடர்ந்து மாயமான மற்ற 3 எம்.எல்.ஏ.க்களும் தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்தை இழந்து விடும். இதனால் முதல்வர் கமல் நாத் கலக்கத்தில் உள்ளார்.