அமைச்சர்களை முற்றுகையிட்டு நீதி கேட்ட டெல்டா மக்களை ஆபாசமாக பேசிய அதிமுக எம்.பி – வைரலாகும் வீடியோ

 

அமைச்சர்களை முற்றுகையிட்டு நீதி கேட்ட டெல்டா மக்களை ஆபாசமாக பேசிய அதிமுக எம்.பி – வைரலாகும் வீடியோ

அமைச்சர்களை முற்றுகையிட்டு நீதி கேட்ட தஞ்சை மக்களை அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் ஆபாசமாக பேசியுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தஞ்சாவூர்: அமைச்சர்களை முற்றுகையிட்டு நீதி கேட்ட தஞ்சை மக்களை அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் ஆபாசமாக பேசியுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கஜா புயலில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதிகளை தமிழக அரசின் சார்பில் பார்வையிட இதுவரை யாரும் வரவில்லை என அப்பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பில் இருந்துள்ளனர்.

குறிப்பாக, ஒரத்தநாடு திருமங்கலக்கோட்டை, தொண்டராம்பட்டு, கண்ணுக்குடி, ஆம்பலாப்பட்டு என பல கிராம மக்கள் தென்னை மரங்கள், கால்நடைகள் என வாழ்வாதாரங்கள் அனைத்தையும் தொலைத்து விட்டு நிற்கிறார்கள்.

இந்த சமயத்தில், அப்பகுதியைச் சேர்ந்தவரான முன்னாள் அமைச்சரும், ராஜ்ய சபா எம்.பி.யாகவும் இருக்கக்கூடிய வைத்திலிங்கம் ஏற்பாட்டில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு ஆகிய நான்கு அமைச்சர்கள் அவ்வழியே காரில் சென்றுள்ளனர்.

vaithilingam

ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன் குடிக்காடு கிராமம் அருகே அவர்கள் வந்தபோது வழி மறித்த கிராம மக்கள், நான்கு அமைச்சர்களையும் முற்றுகையிட்டு, “இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கு. இந்தப் பகுதிகளைக் கடந்துதான் எல்லோரும் போய்க்கிட்டு இருக்கீங்க. இங்கு இறங்கி பார்க்க வேண்டும் என யாருக்கும் தோன்றவில்லை. முதலில் எங்க ஊர்களைப் பார்த்துவிட்டு, பின்னர் பட்டுக்கோட்டை பகுதிக்குச் செல்லுங்கள்” என கோஷமிட்டுள்ளனர்.

இதனால் கோபமடைந்த சொந்த ஊர்க்காரரான வைத்திலிங்கம், முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்களைக் கெட்ட வார்த்தைகளில் ஆபாசமாகத் திட்டியுள்ளார். அது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசுகையில், “பாதிக்கப்பட்ட  நாங்க நிவாரணம் கேட்கலை. வந்து பார்வையிடுங்க எனக் கூறினோம். இதுவரை யாரும் வரவில்லை. அது எங்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இதனால் அமைச்சர்களை முற்றுகையிட்டு நீதி கேட்டோம். இதற்கு எங்களைப் பார்த்து யார் உங்களை கிளப்பிவிட்டார்கள் எனக் கூறி வைத்திலிங்கம் தகாத கெட்ட வார்த்தைகளில் பேசி எங்களை அசிங்கமாகத் திட்டினார். இதை ஒரு அமைச்சர்கூட தடுத்து நிறுத்தவில்லை. ஆறுதல் கூறாமல், எங்களை ஆபாச வார்த்தைகளில் திட்டுவது எவ்வளவு பெரிய கொடுமை. பல ஊர்கள் பாதிக்கப்பட்டு இருக்க ஏன் அமைச்சர்கள் கூட்டமாக ஒன்றாக ஒரே இடத்துக்குச் செல்ல வேண்டும். தனித் தனியாகப் பார்த்தால் நிறைய பகுதிகளைப் பார்த்து மக்களிடம் குறைகளைக் கேட்கலாம்” என வேதனைப் படுகின்றனர்.