அமைச்சர்களின் மீது வெங்காயத்தை வீசுங்க: பிரபல அரசியல் கட்சி தலைவர் பேச்சால் சர்ச்சை

 

அமைச்சர்களின் மீது வெங்காயத்தை வீசுங்க: பிரபல அரசியல் கட்சி தலைவர் பேச்சால் சர்ச்சை

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்காத அமைச்சர்கள் மீது வெங்காயங்களை வீசுங்கள் என பிரபல அரசியல் கட்சி தலைவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

நாசிக்: விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்காத அமைச்சர்கள் மீது வெங்காயங்களை வீசுங்கள் என பிரபல அரசியல் கட்சி தலைவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அளவில் பெரிய வெங்காயம் உற்பத்தியில் மஹாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. குறிப்பாக மஹாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில்தான் மொத்த வெங்காய உற்பத்தியில் 50 சதவீதம் உற்பத்தியாகிறது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் வழக்கமாக கோடைப் பருவத்தில் 3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பெரிய வெங்காயம் பயிரிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 3 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பெரிய வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.

எனினும், சமீப நாட்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை வெறும் ரூ.1-க்கு மட்டுமே விற்பனையாகிறது. இது வெங்காய விவசாயிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல மாதங்களாக நிறைய செலவு செய்து உழைத்து விளைச்சல் ஏற்படுத்தி வெறும் ஒரு ரூபாய்க்கு வெங்காயம் விற்கப்பட்டால் எப்படி லாபம் பார்க்க முடியும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வெங்காய விலை வீழ்ச்சியால் வங்கிக் கடன் உள்ளிட்டவைகளை செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.

rajthackeray

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் விவசாயிகளிடையே பேசிய  நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்காத, அவற்றை நிறைவேற்றாத அமைச்சர்கள் மீது வெங்காயங்களை வீசுங்கள் என்றார். அவரது பேச்சு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.