அமேசான், ப்ளிப்கார்ட் திருவிழா கால விற்பனைக்கு தடை போடுங்க- உங்களுக்கு புண்ணியமா போகும்

 

அமேசான், ப்ளிப்கார்ட்  திருவிழா கால விற்பனைக்கு தடை போடுங்க- உங்களுக்கு புண்ணியமா போகும்

அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் திருவிழா கால சலுகை விற்பனைக்கு தடை போடும்படி மத்திய அரசுக்கு வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நம் மக்களிடம் தற்போது ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் மோகம் அதிகரித்து விட்டது. அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வழங்கும் அதிரடி சலுகைகள் மற்றும் இருந்த இடத்துக்கே பொருட்கள் தேடி வந்து விடும் என்பதால் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வழங்கும் அதிரடி சலுகைகளால் உள்ளூர் கடைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

ஆன்லைன் வர்த்தகம்

குறிப்பாக பண்டிகை காலத்தில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வழங்கும் அதிரடி சலுகையால் உள்ளூர் வியாபாரிகளுக்கு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் திருவிழா கால சலுகை விற்பனைக்கு தடை செய்ய வேண்டும் என வர்த்தகர்கள் அமைப்பு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகம்

அனைத்து இந்திய வர்ததகர்கள் கூட்டமைப்பு இது தொடர்பாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் திருவிழா கால விற்பனை மற்றும் அதிரடி சலுகைகள் அன்னிய நேரடி முதலீடு கொள்கைக்கு எதிரானது. எனவே அந்த நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் விலை அல்லது அதிரடி சலுகைகள் வழங்கும் எந்தவொரு திருவிழா விற்பனை மற்றும் இதர விற்பனை நடத்துவதை நிறுத்துவது தொடர்பாக தயவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உங்களிடம் கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், அந்த கடிதத்தில் அமேசான், ப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களின் பெயரை குறிப்பாக குறிப்பிட்டு வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், ஆன்லைன் நிறுவனங்களின் கொள்ளையடிக்கும் விலை மற்றும் மிக அதிகமாக சலுகைகளை வழங்கியதற்கான ஆதாரங்களையும் வர்த்தக கூட்டமைப்பு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

ப்ளிப் கார்ட் சேல்ஸ்

அமேசான் நிறுவனம் இது தொடர்பாக கூறுகையில், எங்களது வலைதளம் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. பொருட்களின் விலை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்குவதை விற்பனையாளர்தான் முடிவு செய்கிறார் என தெரிவித்தது. ப்ளிப்கார்ட் நிறுவனம் இது குறித்து கூறுகையில், நாங்கள் இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறோம். உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் இந்திய கைவினை துறைக்கு ஆதரவு அளிக்கிறோம். மேலும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையோடு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கிறோம் என தெரிவித்தது.