அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்ந்தது…

 

அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்கா-சீனா இடையிலான முதல் கட்ட வர்ததக ஒப்பந்தம் நிறைவேறியது. இதனால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 42 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. ஆனால் பின்னர் வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டது. இருப்பினும் வர்த்தகத்தின் இறுதியில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. 

அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், நெஸ்லே இந்தியா, கோடக்மகிந்திரா வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், என்.டி.பி.சி., ஹீரோமோட்டோகார்ப், டாடா ஸ்டீல், டெக் மகிந்திரா மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

நெஸ்லே தயாரிப்புகள்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,488 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,065 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 183 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.160.20 லட்சம் கோடியாக உயர்ந்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 59.83 புள்ளிகள் உயர்ந்து 41,932.56 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 12.20 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,355.50 புள்ளிகளில் நிலை கொண்டது.