அமிர்தசரஸ் ரயில் விபத்து: நீதி விசாரணைக்கு பஞ்சாப் முதல்வர் உத்தரவு

 

அமிர்தசரஸ் ரயில் விபத்து: நீதி விசாரணைக்கு பஞ்சாப் முதல்வர் உத்தரவு

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ரயில் விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு அம்மாநில முதல்வர் அமிரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ரயில் விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு அம்மாநில முதல்வர் அமிரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

வடமாநிலங்களில் தசரா விழா கொண்டாட்டம் நேற்றுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராவண வதம் நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடந்தன. அதன் ஒருபகுதியாக, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு அருகே ரயில்வே தண்டவாளமும் செல்கிறது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ராவணன் உருவபொம்மை எரிக்கும் நிகழ்வு நடந்த போது, பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. அதனால் அலறியடித்துக் கொண்டு மக்கள் தண்டவாளத்தை கடந்து ஓடினர். பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் தண்டவாளத்தில் ரயில் வரும் சத்தத்தையும், ரயிலையும் மக்கள் கவனிக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், ரயில் தண்டவாளத்தை மறித்தும் ஏராளமான மக்கள் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. எனவே, வேகமாக வந்த ரயில், கண் இமைக்கும் நேரத்தில் மக்கள் மீது மோதிவிட்டு சென்றது. இந்த விபத்தில் சிக்கி  60 பேர் பரிதாபாக உயிரிழந்தனர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்களை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பாதல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன், விபத்து தொடர்பான நீதி விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையை 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க  காவல்துறை ஆணையருக்கு அமரீந்தர் ஆணையிட்டுள்ளார்.

முன்னதாக, ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி மற்றும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.